

சென்னை: உடல்நலம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நல்வாழ்வு திருவிழாவை சென்னையில் மார்ச் மாதம் 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் நடைபெற உள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டி (The Rotary Club of Madras Temple City ) முன்னெடுக்கும் இந்த நல்வாழ்வு திருவிழாவில் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன், டாக்டர் பிரித்திகா ஆகியோரும் குழந்தைகள் நலம் குறித்து டாக்டர் இந்திரா ரியாலி, கண்களை பாதுகாக்கும் வழி முறைகள் குறித்து டாக்டர் உமா ரமேஷும் விழிப்புணர்வு கருத்துகளை வழங்கவுள்ளனர்.
நம்முடைய உடல் ஆரோக்கியம், சிறுதானியங்களின் முக்கியத்துவம், வாழ்வியல் நடைமுறை தத்துவங்கள் குறித்து பிரபல சித்த மருத்துவ நிபுணர் கு.சிவராமன் இந்த நல்வாழ்வு திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் .
நல்வாழ்வு திருவிழா என்பது வெறும் மருத்துவ விழிப்புணர்வு கருத்துக்களை கொண்டது மட்டுமல்லாமல் ஆரோக்கிய உணவு திருவிழா, கலை நிகழ்ச்சிகள், யோகா பயிற்சிகள், ஸும்பா நடனம், சிரிப்பு யோகா சிகிச்சை, சிறுதானிய உணவுகள் சமைக்கும் மற்றும் உண்ணும் போட்டிகள் ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நல்வாழ்வு திருவிழாவிற்கு அனுமதி கட்டணம் எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் கடைகளின் மூலம் பெறப்படும் நிதியானது இலவச கண்புரை அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் உள்ளிட்ட பல நல்ல பணிகளுக்கு செலவழிக்கப்படும் என்று மெட்ராஸ் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப்பின் உறுப்பினர் டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.