மதுரை அவனியாபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு

மதுரை அவனியாபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு
Updated on
1 min read

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் த.வினோத் அவனியாபுரம் பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த முருகன் சிலையை கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து கூறிய ஆய்வு மாணவர் வினோத் கூறியதாவது: “தமிழ் தெய்வ வழிபாட்டில் முருகனுக்கென்று தனி இடமுண்டு. குறிஞ்சி நிலத் தலைவனான முருகனுக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. பல தனிச் சிலைகளும் உள்ளன. மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள செம்பன் ஊரணியின் அருகாமையில் இந்த முருகன் சிலை, தலை இல்லாமலும் முன்கைகள் மிகவும் சிதைந்த நிலையிலும் ஒரு மரத்தின் வேருக்கு அருகில் கிடக்கிறது.

இதன் உயரம் 60செ.மீ ஆகவும் அகலம் 50 செ.மீ ஆகவும் உள்ளது. கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்களுடன் தோள் மற்றும் கால் அணிகள் அணிந்த நிலையில் மேடையில் இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டபடி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது இடது கைகள் சிதைந்துள்ளன. பீடத்தின் கீழ்ப் பகுதியில் நீண்ட தோகையுடன் ஆண் மயில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், “இந்த முருகன் சிலையானது, அருகில் உள்ள சிதைந்து போன செவ்வந்தீசுவரர் சிவன் கோயிலைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்தச் சிலையை யாராவது முற்காலத்தில் கொண்டுவந்து இங்கு வைத்திருக்கலாம்.

சிதைந்து போன வலதுகையில் வஜ்ராயுதம் உருக்குலைந்த நிலையில் தென்படுகிறது. சன்னவீரம் அணிந்து பிற்காலப் பாண்டியர் கலைப்பாணியுடன் கூடிய இந்த முருகன் சிலை கி.பி. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்” என்றார். இவரது ஆய்வுப் பணிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜா.குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in