

மதுரை: சமூக வலைதளங்களில் ‘பிடிஎஸ்’ (The Bangtan Boys) என்ற 7 கொரியா இளைஞர்கள் K-Pop இசைக்குழு உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ளது. இந்த பிடிஎஸ் கொரியன் இளைஞர்கள் வெளியிடும் ஒவ்வொரு பாடல்களும் காட்சிகளும் உலகளவில் அதிகம் பகிரப்படுகின்றன. இவர்களுடைய பெரும்பாலான பாடல்கள் கொரிய மொழியில் ஆங்கிலம் கலந்துதான் எழுதப்பட்டிருக்கும். இவர்கள் வீடியோவை இளைஞர்கள், வளர் இளம் பெண்கள் அதிகம் பார்க்கிறார்கள். கரோனா பெரும் தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கியிருந்த இளைஞர்கள், மாணவ - மாணவிகள் இவர்களுடைய பாடல்கள், நடனம், நாடகத்தின் அறிமுகம் கிடைத்தது. இன்று உலகளவில் இவர்களை கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்.
இந்த அளவுக்கு பிரபலமான எந்த மியூசிக் பேண்டும் உலகளவில் இதுவரை இருந்ததில்லை என்றுதான் கூற வேண்டும். அதனால், இந்தியாவில் பள்ளி மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள் இவர்களை ‘மைக்கேல் ஜாக்சன்’ போல் கொண்டாடுகிறார்கள். தற்போது இவர்களுடைய வீடியோக்களுக்கு அடிமையாகி மன அழுதத்தத்துக்கு ஆளாகி மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவப் பேராசிரியர் ஆ.காட்சன் கூறுகையில், “ஆரம்பக் கட்டத்தில் இவர்களுடைய வீடியோவை பார்த்தவர்களுக்கு மன உற்சாகத்தை தரக் கூடியதாக இருந்தது. நாளடைவில் பொழுதுப்போக்கு வீடியாகவும் மாறியது. ஒருநாள் ஒரு மணி நேரம் பார்த்த இவர்கள் பாடலுக்கும், நடனத்திற்கும் அடிமையானவர்கள் தற்போது 6 மணி நேரம், நாள் முழுவதும் பார்ப் பவர்களாக மாறினர். இரவு பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி மாணவர்கள், இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு பார்க்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் குடும்ப நபர்களை விட்டு கதவை பூட்டிக் கொள்வது, படிப்பில் நாட்டமில்லாமல் செல்வது, தனிமையை விரும்புவது போன்ற இவர்கள் வீடியோக்களுக்கு அடிமையானவர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய தொடங்குகிறது. இந்த வீடியோவில் வரும் ‘பிடிஎஸ்’ இசைக்குழு நட்சத்திரங்கள் ஆணா, பெண்ணா என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு மிக இளம் வயதினராக அவர்கள் முகம், உடல் தோற்றம் மற்றவர்களை கவரக் கூடியவர்களாக இருக்கும். பெரும்பாலும், 13 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட வளரும் பெண்கள்தான் அதிகம் இவர்களுக்கு ரசிகர்களாகவும், அடிமையாகவும் உள்ளனர்.
குறிப்பாக நன்கு படிக்கக் கூடிய பள்ளி மாணவிகள், ரசிகர்களாக இருந்து பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த ‘பிடிஎஸ்’ நட்சத்திரங்கள் தான், உலகத்திலே நல்லவர்கள், தங்கள் பெற்றோர்களை விட நல்லவர்கள், என்று சாதிப்பார்கள். அவர்கள், வெளியிடக் கூடிய உணர்ச்சி வசப்படக் கூடிய வீடியோக்களை பார்த்து அதனுடன் சேர்ந்து சிரிப்பது, அழுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதுதான் உலகம் என்று அதில் லயித்து கிடக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் அந்த நட்சத்திரங்களை போல் நடை, உடைப் பாவனைகளை மாற்றவும் முயல்கிறார்கள். உடற்பயிற்சி மூலம், பிளாஸ்டிக் சர்ஜரி மூலமும் தங்களை மாற்றிக் கொள்ள முயற்சி எடுக்கிறார்கள். அந்த நட்சத்திரங்களை போல் கண்ணாடி, தோப்பி போன்ற அலங்காரப் பொருட்களை ஆன்லைனில் பார்த்து வாங்கி அணிகிறார்கள். அந்த நட்சத்திரங்களை கொரியா செல்ல வேண்டும், அவர்களை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கற்பனைக்குள் செல்வார்கள்.
அவர்களிடம் பேசுவதற்காக கொரியா மொழியை கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். தங்களை அந்த நட்சத்திரங்களின் ஆவி என்று அழைத்துக் கெகாண்டு அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்களையும் அதிக பார்வையாளர்களை எட்டுவதற்கு தங்களை அர்ப்பணிக்கிறார்கள். முற்றிய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கைகளை வெளியே வரும்.
அவர்கள் வீடியோவை பார்க்க வாய்ப்பு இல்லாவிட்டால் பெற்றோர்களையும் எதிரியாக சித்தரிக்க தொடங்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணம், முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த வீடியோவை மீண்டும் பாப்பதற்கு எந்த நிலைக்கு செல்லக் கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறார்கள். மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். நாளடைவில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முற்றிய நிலையில் தான் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை மாறக்கூடும்.
அதனால், குழந்தைகள் ஏதோ கொரியன் பாடல்களை பார்க்கிறார்கள் என்று பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருக்காமல், அதிக நேரம் செல்போன் பார்க்கும் போது நெருங்கி கண்காணிக்க வேண்டும். ‘பிடிஎஸ்’ இளைஞர்களின் ஸ்லோகன் சொல்றதே, ‘நீங்கள் உள்ளே நுழைந்து விட்டால் வெளியேற முடியாது’ என்பதுதான் அவர்களுடைய முக்கியமான முழக்கமாக இருக்கிறது. அவர்கள் சொல்வது உண்மைதான் ஒரு முறை இந்த வீடியோ பார்க்க உள்ளே நுழைந்தவர்கள் தற்போது அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
ஏற்கெனவே பாதிக்கப்பட்டரவ்களுக்கு லேப்டாப், செல்போன் கொடுக்கவே கூடாது. பெற்றோர்கள் குழந்தைகள் பார்க்கும் வீடியோ ஹிஸ்ட்ரியை பார்க்க வேண்டும். கரோனா தொற்று போல், மாணவர்களும் இந்த வீடியோக்கள் பெரும் தொற்றாக மாறி வருகிறது. பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.