வீட்டை சீரமைத்து கொடுத்த ஆட்சியருக்கு பரமக்குடி மூதாட்டி நன்றி!
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பழுதடைந்த வீட்டை சீரமைத்துக் கொடுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு மூதாட்டி நன்றி தெரிவித்தார்.
பரமக்குடி அருகே சூடியூரைச் சேர்ந்த மூதாட்டி ராக்கு ( 75 ). இவர் தான் வசித்து வரும் வீடு பழுதடைந்து சிரமப்படுவதாக 15 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அவரது வயது முதிர்வை கருத்தில் கொண்டு, மூதாட்டி இருந்த இடத்துக்கே ஆட்சியர் சென்று அவரிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர், பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரை கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதனடிப் படையில், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட வீட்டை நேற்று ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் நேரில் சென்று மூதாட்டியிடம் ஒப்படைத்தார். அப்போது, மூதாட்டி ஆட்சியரின் கைகளை பிடித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி வட்டார வளா்ச்சி அலுவலர் தேவ பிரியதா்ஷினி, சூடியூர் ஊராட்சித் தலைவா் களனீஸ்வாி ஆகியோர் கலந்து கொண்டனர்.
