

மதுரை: “சாதி வேறுபாடின்றி பழகும் குணமே கிராமங்களின் அடையாளம், இத்தகைய கிராமங்களில்தான் அன்பை மட்டுமே விதைக்கும் நிலங்கள் உள்ளது” என இயக்குநர் சுசி.கணேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை வன்னிவேலம்பட்டி கிராமத்தில் அரசுப்பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆசிரியர் செந்தி எழுதிய ‘நினைவுகளின் நிலவெளி’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மணிவண்ணன் வரவேற்றார். இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் சுசி.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலை வெளியிட்டு பேசியது: “நான் வாழ்ந்த இளவயது கிராமத்து வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கம் இன்றளவும் உள்ளது.
இங்குள்ள தெப்பக்குளம் என்பது வெறும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடமல்ல, அது பெரும் இலக்கியம். மனித மனம் எவ்வளவு மென்மையானது என்பதை கற்றுக்கொடுத்தது. இப்போது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் குளித்தாலும், இக்கிராம தெப்பக்குளத்தின் ஒரு நிமிட குளியலுக்கு ஈடாகாது. பணம் தேடும் பயணத்தில் நமது இயல்பை இழந்து வருகிறோம்.
அதனால் இப்போது கிராமங்களில்கூட வெள்ளந்தியான மனிதர்களை பார்க்க இயலவில்லை. சாதி வேறுபாடு பார்க்காமல் பழகும் குணமே கிராமங்களின் அடையாளம். அதுவே கிராமங்களின் பலமும் கூட. அன்பை மட்டுமே விதைக்கும் நிலங்களை கொண்டது கிராமங்கள். இலக்கியங்கள் சொல்லாத அருமையான வாழ்க்கை முறையை முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அதை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. இத்தகயை நற்பண்புகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.