

கொல்கத்தா: கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாக உதயமாகின. இதில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்து உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற உயர்ந்தஇடத்தை எட்டி உள்ளது. பொருளாதாரம் மட்டுமன்றி ராணுவம், தொழில்நுட்பம், அறிவியல், விண்வெளி என அனைத்து துறைகளிலும் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இதற்கு நேர்மாறாக பாகிஸ்தானின் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருக்கிறது. அந்தநாடு சுதந்திரம் அடைந்தது முதல்இப்போது வரை ராணுவ சர்வாதிகாரமும் தீவிரவாதமும் கோலோச்சி வருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தானை சேர்ந்த ‘சன்கி நியூஸ்' என்ற சமூக வலைதளம் இந்தியாவின் பல்வேறு சாதனைகள் சார்ந்த வீடியோ, புகைப்படங்களை பாகிஸ்தான் மக்களிடம் காண்பித்து அவர்களின் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள தொங்கும் ஓட்டலின் வீடியோவை பாகிஸ்தான் இளைஞர் ஒருவரிடம் காண்பித்து அவரது கருத்துகளை சன்கி நியூஸ் அண்மையில் வெளியிட்டது.
கொல்கத்தா தொங்கும் ஓட்டலை பார்த்த பாகிஸ்தான் இளைஞர், இந்த ஓட்டல் நிச்சயமாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அல்லது முன்னேறிய ஆசிய நாடுகளில் இருக்கக்கூடும் என்று கூறினார்.
இல்லை, இந்த ஓட்டல் இந்தியாவின் கொல்கத்தா நகரில்இருக்கிறது என்று சன்கி நியூஸ் தொகுப்பாளர் கூறியதும் பாகிஸ்தான் இளைஞர் வியப்பில் உறைந்தார். இந்தியா அபாரமாக முன்னேறிவருகிறது. நிலவுக்கு விண்கலனை அனுப்புகிறது. புதிய விமான நிலையங்களை திறக்கிறது என்று பாகிஸ்தான் இளைஞர் புகழாரம் சூட்டினார். இந்த வீடியோ பாகிஸ்தான் மட்டுமன்றி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொங்கும் ஓட்டலின் சிறப்பு: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவின் புதிய நகரத்தின் நுழைவு வாயிலாக விஸ்வ பங்களா கேட் அமைந்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்குதான் தொங்கும் ஓட்டல் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் அமர்ந்து நகரின் அழகை ரசிக்கலாம். இது ஒரு சுழலும் ஓட்டல் ஆகும். ஒரே நேரத்தில் 72 பேர் அமர்ந்து சாப்பிட முடியும். கொல்கத்தாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தொங்கும் ஓட்டல் அமைந்துள்ளது.