

மதுரை: தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே இயற்கை விவசாயம் செய்து வருகிறார் மதுரை அருகே பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி. மற்ற விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டுவதற்கு 12 வகை பாரம்பரிய நெல் ரகங்களின் விளக்கத்திடலை தனது வயலில் அமைத்துள்ளார்.
மதுரை அருகே பொதும்பு கிராமத்தில் பொறியாளர் அமைத்துள்ள பாரம்பரிய நெல் ரகங்களின் செயல்விளக்கத் திடல். (உள்படம்) சூரியமூர்த்தி. பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் மகன் சூரியமூர்த்தி (29). பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொடர்பு அலுவலராக உள்ளார்.
அதே நேரம் பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், இருபோகத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேலும் தன்னைப் போன்று இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட செயல் விளக்கத் திடல் அமைத்துள்ளார்.
இதுகுறித்து ப.சூரியமூர்த்தி கூறியதாவது: எனது தந்தை பழனிவேல் செயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தார். ரசாயன உரங்களுக்காக அதிக செலவு செய்தார். மண்ணை பாதுகாக்க இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை என் தந்தை ஏற்றுக்கொண்டார். கடந்த 4 ஆண்டுகளாக இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
வைகைப் பாசனத்திலும், கிணற்று பாசனம் மூலமும் இருபோக விவசாயம் செய்கிறோம். நமது நெல்லைக் காப்போம் இயக்கம், தியாகராசர் கல்லூரி தாவரவியல் துறையுடன் இணைந்து 60 சென்ட் பரப்பளவில் மாதிரி விளக்கத்திடல் அமைத்துள்ளேன்.
இதில் அறுபதாம் குறுவை, பூங்கார், சீரகச்சம்பா, காலாபாத், சொர்ணமசூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, ரத்தசாலி, வெள்ளைக்கவுனி, அரைச்சம்பா, குதிரைவால் சம்பா, கருங்குறுவை, இலுப்பைப்பூ சம்பா ஆகிய ரகங்களை பயிரிட்டுள்ளோம். இயற்கை விவசாயத்திலும் கூடுதல் லாபம் கிடைக்கிறது. இதை அறிந்து மற்ற விவசாயிகளும் எங்களது வயலை பார்வையிட்டு, இயற்கை முறை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.