திருக்கடையூரில் நேற்று பீமரத சாந்தி செய்துகொண்ட தம்பதிகள்.
திருக்கடையூரில் நேற்று பீமரத சாந்தி செய்துகொண்ட தம்பதிகள்.

திருக்கடையூரில் ஒரே நேரத்தில் 35 தம்பதிகள் ‘பீமரத சாந்தி' - வேலூர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி

Published on

மயிலாடுதுறை: ஒரே பள்ளியில் படித்த 35 மாணவர்கள் நேற்று ஒரே நேரத்தில் திருக்கடையூரில் பீமரத சாந்தி செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலில், 60 வயதுபூர்த்தியடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70-வது வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி, 80-வதுவயது தொடங்குகிறவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம், 85 வயதைக் கடந்தவர்கள் கனகாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தைச் சார்ந்த, வேலூர் வேங்கடேஸ்வரா உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் (தற்போது மேல்நிலைப் பள்ளி) 1971-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி முடித்த 35 மாணவர்கள், தம்பதி சகிதமாக நேற்று திருக்கடையூர் வந்தனர்.

அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஹோமம் வளர்த்து, அனைவருக்கும் பீமரத சாந்தி நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர்முனைவர் கே.கண்ணன் கூறியதாவது: நாங்கள் அனைவரும்1971-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி (11-ம் வகுப்பு) முடித்தோம். 2000-ம்ஆண்டிலிருந்து மீண்டும் அனைவரும் ஒருங்கிணைந்து பயணித்து வருகிறோம். நாங்கள் படித்த பள்ளிக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பாராட்டி, கவுரவித்து வருகிறோம். அவ்வப்போது நாங்கள் அனைவரும் சந்தித்து வருகிறோம்.

எல்லோருக்கும் இந்த ஆண்டு 70 வயது என்பதால், நாங்கள் திருக்கடையூரில் பீமரத சாந்தி செய்து கொண்டோம். இது மிகவும்மனநிறைவாக இருந்தது. இதேபோல, 2015-ம் ஆண்டில் 60-வதுவயதின்போதும் இங்கு வந்துசஷ்டியப்த பூர்த்தி செய்துகொண்டோம். இவ்வாறு முனைவர் கே.கண்ணன் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in