மேட்டூர் அருகே 17-ம் நூற்றாண்டு நாயக்கர் கால சூலக்கல் கண்டெடுப்பு

மேட்டூர் அருகே 17-ம் நூற்றாண்டு நாயக்கர் கால சூலக்கல் கண்டெடுப்பு
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அருகே மாதநாயக்கன்பட்டியில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சூலக்கல் கண்டறியப்பட்டுள்ளது.

மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில தொன்மை பாதுகாப்பு மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் தலைவராக தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், செயலாளாராக ஆசிரியர் அன்பரசி, மன்ற உறுப்பினராக பள்ளி மாணவர்கள் உள்ளனர். தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களான மாணவர்களுடன் களப்பயணம் மேற்கொண்டனர். அப்போது, மாணவர்கள் கொடுத்த தகவலின்படி, பள்ளியின் அருகில் உள்ள காட்டில் பழமையான கல்லை ஆய்வு செய்தனர். இதில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சூலக்கல் என கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளர் அன்பரசி கூறுகையில், “பள்ளி மாணவர்களுடன் கள ஆய்வு செய்த போது, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சூலக்கல் என்பது தெரியவந்தது. இந்த சூலக்கல் 3 அடி உயரம் 1 அடி அகலம் கொண்ட வெள்ளை கல்லிலால் ஆனாது. இந்த கல்லின் நடுவில் திரிசூலம் போன்ற அமைப்பும், அதன் இருபுறமும் சூரியன், சந்திரன் போன்ற அமைப்பும் உள்ளது.

கோவிலுக்கோ அல்லது வேறு எதற்காவது தானம் கொடுத்தற்க்காக வைக்கப்பட்டது தான் இந்த சூலக்கல். சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானம் நிலைத்து இருக்கும் என்று பொருள்படும். இதில் திரி சூலம் போன்ற அமைப்பு இருப்பது நாயக்கர் காலத்தை குறிப்பதாகும். இந்த சூலக்கல் 400 ஆண்டுகள் பழமையானது. இது போன்ற நடுகற்கள், கல்வெட்டுகள், தொல்லியல் எச்சங்கள் வரலாற்றை அறிய உதவும் ஆவணம். இது போன்றவற்றை பாதுகாக்கவும் , மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொன்மை பாதுகாப்பு மன்றம் பள்ளிகளில் செயல்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in