சித்தாமூர் அருகே கண்டெடுக்கப்பட்ட 8-ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம்!

சித்தாமூர் அருகே கண்டெடுக்கப்பட்ட 8-ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம்!

Published on

மதுராந்தகம்: செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் 8- ம்நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவையின் உருவம், பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வரலாற்று சின்னங்கள் குறித்து, வரலாற்று ஆய்வாளர் இரா.ரமேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில், சித்தாமூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அச்சிறுப்பாக்கம் - சூனாம்பேடு செல்லும் சாலையில் கயப்பாக்கம் அருகே புத்தூர் கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டபோது, 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவையின் புடைப்பு சிற்பத்தை அவர் கண்டறிந்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: புத்தூர் கிராமத்தில் வயல்வெளியில், மலையின் கீழ் காணப்படும் கொற்றவை புடைப்பு சிற்பம் 8-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். கொற்றவையின் புடைப்பு சிற்பத்தின் கீழ் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் உள்ள தகவலின்படி, இப்பகுதியை ஆட்சி செய்த பல்லவ மன்னனால் இச்சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

மேலும், சிலையின் கீழ் செதுக்கப்பட்ட கல்வெட்டில் ஸ்ரீ சத்துரு கேசரி என்ற பல்லவ மன்னனின் வாசகம் இடம் பெற்றுள்ளது. கல்லில் செதுக்கப்பட்டுள்ள மெய்கீர்த்தியின் அடிப்படையில், பல்லவ மன்னனின் பெயர் இரண்டாம் நரசிம்மபல்லவன் என்றும், அவர் ராஜசிம்ம பல்லவன் என்ற பட்டப் பெயர் கொண்டவர் எனவும் கருத முடிகிறது.

இவரது ஆட்சியானது, கி.பி. 685 முதல் கி.பி. 705 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பகுதி பல்லவர் ஆட்சி காலத்தில் சிறப்புடன் இருந்துள்ளது. மேலும், கொற்றவை சிலைக்கு அருகில் உடைந்த நிலையில் சிவலிங்கமும் மற்றும் அருகில் செக்குக் கல்லும், அதில் எழுத்தும் காணப்படுகின்றன.

கொற்றவை புடைப்பு சிற்பம் நீண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள உருவம் கலை, அழகு உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீள்வட்ட முகமும், சிறு புன்னகை தவழும் மெல்லிய உதடு, 8 கரங்கள், பிரயோக சக்கரம், சங்கு, கத்தி, கேடயம், அம்பு, சூலம் ஆகியவை சிற்பத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொற்றவை சிற்பம் சுமார் 4 அடி உயரம் இரண்டரை அடி அகலத்தில் செதுக்கப்பட்டுஉள்ளது.

கொற்றவை இடது காலை நிறுத்தி, வலது காலை சற்று மடித்து நிறுத்தி, திரிவங்க நிலையில் பலகைக் கல்லில் காட்டப்பட்டுள்ளாள். ஐந்து அடுக்குகளில் உயர்ந்த கரண்ட மகுடம், பத்திர குண்டலங்கள், மார்புக் கச்சை, இடைக் கச்சை, பாகுவளையங்கள் அணிந்து எளிய கோலத்தில் அழகுடன் காட்டப்பட்டுள்ளது.

8 கைகளில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், அம்பு, வில் என படைக்கலங்கள் கொண்டு, முன் வலது கையில் ஆகூய வரதமும், இடது கை இடையில் கடி வரதமுமாக செதுக்கப்பட்டுள்ளது. வலது தோளின் பின்புறம் அழகிய மூவிலைச் சூலம் காட்டப்பட்டுள்ளது.

வலது புறம் கலைமானும், இடதுபுறம் சிம்மமும் உள்ளன. வலது புற காலடியில் அடியார் ஒருவரும், இடதுபுறம் சிரம்பலி தரும் வீரனும் காட்டப்பட்டுள்ளது. கொற்றவை சிற்பத்தில் கரங்களில் வலையலும், இடுப்பில் கலையம்சத்தோடு கூடிய அணிகலன்களும் காணப்படுகின்றன.

கொற்றவைக் காலடியில் பல்லவர் கால அழகிய தமிழ் எழுத்தில் ‘ஸ்ரீ சத்ரு கேசரி’ என்ற பல்லவர் விருது பெயர் கல்வெட்டாக உள்ளது. மேலும், கொற்றவையின் மெய்காவலர்களாக கருதக்கூடிய துவாரபாலகியின் 2 புடைப்புச் சிற்பங்கள், பொன்னியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள வயல்வெளியில் காணப்படுகின்றன.

அதில் ஒன்று உடைந்த நிலையில் உள்ளது. சுமார் நான்கரை அடி நீளமும், இரண்டரை அடி அகலம் கொண்ட இச்சிற்பங்களில் ஒன்று இடுப்பளவு உடைந்துள்ளது. ஒரு பெண் காவலர் (துவாரபாலகி) வலது கரத்தில் நெடிய வாள் ஏந்தி, இடது முழங்கையை ஒரு பீடத்தின் மீது நிறுத்தி, திரிபங்க நிலையில் பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளாள்.

4 அடுக்கு கரண்ட மகுடம், பத்திர குண்டலங்கள், இடைக்கச்சை, மார்புக் கச்சை அணிந்து காணப்படுகிறாள். உடைந்த சிற்பத்தில் உள்ள பெண் காவலரின் இடது கையில், அவளது உருவத்துக்கும் மேலாக உயர்ந்த வில், தோலின் மீது சாய்த்து பிடித்து வலது கரத்தில் வாலினை தோலின் மீது படிய வைத்துள்ளாள்.

கொற்றவைக்கும், துவாரபாலகிகளுக்கும் பல்லவர் காலத்தில் செங்கல்லாள் கட்டப்பட்ட கோயில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவை, மாமல்லபுரத்தில் உள்ள திரவுபதி ரதம் சிற்ப மாதிரியை நினைவூட்டுகின்றன. விருதுப் பெயர், கல்வெட்டு, இந்த சிற்பங்கள் ஆகியவை ராஜசிம்ம பல்லவன் காலத்தை உடையது என்று கருத இடமுண்டு.

மேலும், கொற்றவை அருகில் உள்ள பாறையில் 12 மற்றும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு ஒன்று உள்ளது. இதில், செக்கு கல்லுக்கு கிழக்கு பகுதியில் எழுத்து காணப்படுகிறது. அதில், இதனை செய்தவன் ‘தென்னவரையன் மருமகன் தொண்டைமான்’ என செக்கை செய்து கொடுத்த அதிகாரியின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொற்றவை வழிபாட்டு முறை, இன்றும் இப்பகுதியில் இருப்பது சிறப்பானதாகும்.

மேலும், செய்யூர் வட்டாரத்தில் அரிய சிற்பங்களை கண்டறிந்துள்ளோம். இவற்றை நாங்கள் பாதுகாத்து பராமரிப்பது மிகவும் சவாலானது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சிலைகளை அருங்காட்சியகத்தில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in