Published : 01 Feb 2024 04:20 PM
Last Updated : 01 Feb 2024 04:20 PM

பிரதமருக்கு முதல்வர் பரிசளித்த மதுரை ஓவியரின் கோட்டோவிய நூலின் பின்புலம்!

மதுரை புதுமண்டபத்தின் சிற்பங்களை கோட்டோவியமாக தீட்டி நூலாக்கிய ஓவியர் மு.ரத்தின பாஸ்கர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்கு கடந்த 19-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் ‘உளி ஓவியங்கள்’ என்ற நூலை பரிசாக அளித்தார். கோட்டோவியங்கள் அடங்கிய இந்த நூலை உருவாக்கியவர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஓவியர் மு.ரத்தின பாஸ்கர்.

தொன்மைவாய்ந்த நகரான மதுரையின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், புதுமண்டபம், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம் உள்ளிட்டவை திகழ்கின்றன.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை மீனாட்சி அம்மன் குணமாக்கினார் என்ற நம்பிக்கையால், அவர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமான மானியங்களை வழங்கினார். அதன்படி மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு எதிரில் கருங்கல்லால் ஆன வசந்த மண்டபத்தை கி.பி. 1626 முதல் கி.பி. 1645-ம் ஆண்டு வரை 19 ஆண்டுகளில் கட்டி முடித்தார். தலைமை சிற்பி சுமந்திரமூர்த்தி தலைமையிலான சிற்பிகள் இந்த மண்டபத்தை உருவாக்கினர்.

இந்த வசந்த மண்டபம் கிழக்கு மேற்காக 322 அடி நீளம், தெற்கு வடக்காக 90 அடி அகலமுடையது. 25 அடி உயரமுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடைய 124 தூண்கள், 5 சிறு தூண்களுடன் அழகுற காட்சி அளிக்கிறது. இம்மண்டபத்தில் 22 தெய்வ உருவச் சிலைகள், 2 முனிவர்கள், 4 சேடிப் பெண்கள், 10 யாளி சிலைகள், 6 குதிரை வீரர்கள், உட்கூரையில் 5 சக்கரங்கள், ஆட்சிபுரிந்த நாயக்க வம்சத்தினரின் 10 சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த சிற்பங்கள் அனைத்தையும் கோட்டோ வியங்களாக வரைந்து ‘உளி ஓவியங்கள்’ என்ற நூலை உருவாக்கியுள்ளார் ஓவியர் மு.ரத்தின பாஸ்கர் (51).

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஏழாயிரம்பண்ணை பள்ளியில் படிக்கும்போது ஓவியம் மீதான ஆர்வத்தை ஆசிரியர் கலாதேவி ஏற்படுத்தினார். ஓவியப் போட்டியில் மகாகவி பாரதியார், தென்னைமரம் வரைந்து முதல் பரிசு பெற்றேன். மதுரை புனித மரியன்னை பள்ளியில் படித்தபோது ஓவிய ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் (1989-92) படித்தேன்.

சென்னைக்கு அண்மையில் வந்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்
ஸ்டாலின் பரிசளித்த ‘உளி ஓவியங்கள்’ நூல்.

என் தந்தை முருகேசன் குற்றாலத்துக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றபோது, அங்கு நான் வரைந்த ஓவியத்தைப் பார்த்த அப்பாவின் நண்பர் பாண்டியராஜன், என்னை மதுரையைச் சேர்ந்த ஓவியர் சவுந்திரபாண்டியனிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டார். படிப்படியாக பல்வேறு ஓவியர்களிடம் ஓவியக் கலையை கற்றேன். அதோடு புகைப்படக் கலையையும் கற்றுத் தேர்ந்தேன்.

சிற்பங்களின் கருவூலமாகத் திகழும் புதுமண்டபத்திலுள்ள சிற்பங்களை கண்டு வியந்தேன். அதனை வெளிநாடுகளைச் சேர்ந்த 2 பேர் கோட்டோவியமாக வரைந்து புத்தகமாக ஆவணப்படுத்தியுள்ளனர். அதேபோல், நாமும் செய்தாக வேண்டும் என முடிவு செய்து, 2015 முதல் கோட்டோவியமாக கணினி மூலம் வரையத் தொடங்கினேன். புதுமண்டபத்தில் 60 ஒற்றைக்கல் சிற்பங்கள், 744 புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அதில் 60 சிற்பங்களை நேர் பார்வை, இடப்பார்வை, வலப்பார்வை என முப்பரிமாண பார்வையில் 180 கோட்டோவியங்களாக வரைந்துள்ளேன். 8 ஆண்டுகள் கடினமான உழைப்பில் சிற்பங்களை கோட்டோவியமாக வரைந்து ‘உளி ஓவியங்கள்’ என்ற தலைப்பில் நூலாக்கினேன்.

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாளில் 15 இஞ்ச் நீளம், 10 இஞ்ச் அகலத்தில் 126 பக்கங்களில் நூலை உருவாக்கினேன். கடந்த ஆண்டு ஆக. 12-ம் தேதி தியாகராசர் கல்லூரியில் இந்நூல் வெளியீட்டு விழா நடந்தது. அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். அவர்கள் மூலமாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு இந்நூல் குறித்த தகவல் சென்றுள்ளது. அவர் இந்த நூலை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இதன் மூலம் மதுரையின் பெருமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 744 புடைப்புச் சிற்பங்களை கோட்டோவியங்களாக வரைந்து அடுத்த தொகுப்பை வெளியிடுவதற்கு கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x