

சென்னை: சென்னை மாநகரில் அமைந்துள்ள பழமையான பூங்காக்களில் அண்ணாநகர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர(டவர்) பூங்காவும் ஒன்று. இந்த பூங்கா 1968-ல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி திறந்து வைத்தார்.
பூங்காவில் உள்ள 135 அடி டவர் கோபுரம் இன்றுவரை சென்னைவாசிகளின் பிரபலமான சுற்றுலாதளமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் 2011-ம் ஆண்டு கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த தடை நீடித்தது. பின்னர் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த பூங்காவை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து சென்னை மாநகராட்சி ரூ.30 லட்சத்தில் கோபுரம்மற்றும் பூங்காவை சீரமைத்தது.
கோபுரத்தைச் சுற்றி நவீன பாதுகாப்பு வசதிகளுடன் தடுப்பு கம்பிகள் மற்றும்பக்கவாட்டு பகுதிகளில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, மக்கள் கீழே தடுமாறி விழுந்து விடாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் டவர் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.
அதன்படி பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களை வரவேற்கும் விதமாக டவர் கோபுரம் வரை நீண்ட வரிசையில் வண்ணமயமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. இடையிடையே உயர் மணிக்கூண்டுகளும் அலங்கார தோரணையுடன் நிற்கின்றன. அதேபோல டவர் கோபுரத்தை சுற்றிலும் நீருற்றுகள் நிறுவப்பட்டுள்ளன. மாலை வேளைகளில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட இந்த நீருற்றுகள் காண்போரை கவர்ந்து இழுக்கவும், ரசிக்கவும் வைக்கும்.
இவைதவிர சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் மைதானம், திறந்தவெளி அரங்கம், திறந்தவெளி கலைக்காட்சிக் கூடம், குழந்தைகள் விளையாட்டு திடல், பெண்களுக்கான தனி உடற்பயிற்சி மையம், யோகா மையம், நடைபயிற்சி பாதை, ஆங்காங்கே அமர்ந்துஇளைப்பாற இருக்கைகள், வண்ணமயமான ஓவியங்கள், சுற்றிலும் அடர்த்தியான மரம், செடி வகைகள் என இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அண்ணாநகர் டவர் பூங்கா அமைந்துள்ளது.
குழந்தைகள் விளையாட்டு திடலை அடுத்து காணப்படும் குளமானது, அமைதியான சூழலை எடுத்துரைக்கும் வகையில் காட்சியளிப்பதால், குளத்தை காணவரும் மக்கள் நீண்ட நேரம் நின்று அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். இதையொட்டி பாதுகாப்பாக நின்று பார்வையிடுவதற்கு வசதியாக தடுப்பு வேலிகளும், அமர்ந்து இளைப்பாற திட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குளத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் படகு சவாரி நடைபெற்று வந்ததாகவும், ஏராளமான மக்கள் விரும்பி படகு பயணத்தை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. பூங்கா சீரமைப்புக்கு பிறகு தற்போது குளத்தை காணவரும் பார்வையாளர்கள் பலர் மீண்டும் இந்த குளத்தில் படகு சவாரி ஏற்படுத்தப்படுமா? என்ற கேள்வியை முன்வைத்து செல்கின்றனர்.
குளத்தின் நடுவே காணப்படும் பழமையான மரத்தை சுற்றிவரும் வகையில் படகு சவாரியை அமைப்பதுடன், பூங்காவில் காணப்படும் பழமையான மீன் நீரூற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரிக்கவும் செய்தால் பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும், மாநகராட்சிக்கு வருமானமும் பெருகும் என்று பலர்கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கொரட்டூரை சேர்ந்த சிவா கூறியதாவது: சென்னையில் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் சினிமா தியேட்டர்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் தான் செல்ல வேண்டியுள்ளது. அண்ணாநகர் டவர் பூங்கா பிரபலமானது என்பதால் விடுமுறை தினங்களில் பூங்காவுக்கு வருவது வழக்கம். இங்கு சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இருந்தாலும் கூட, குடும்பமாக பொழுதை போக்கிட கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறது.
அந்த வகையில் டவர் பூங்காவில் படகு சவாரி செய்வதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். பூங்காக்களுக்கு வரும் மக்களின் வருகை அதிகரிக்கும். மாநகராட்சிக்கு கணிசமான வருமானமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேபோல பூங்காக்களில் குழந்தைகளை கவரும் வகையிலான சிறிய வகையிலான லேசர்ஷோக்கள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை நடத்தினால் மாலை வேளைகளில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் நேரத்தை போக்கும் இடமாக பூங்காக்கள் மாறும் என்றார்.
அண்ணாநகர் அருகே உள்ள கல்லூரியில் பயிலும் மாணவி சிவரஞ்சனி: டவர் பூங்காவில் உள்ள நீரூற்றுக்களின் நடுவே காணப்படும் பழமையான மீன் நீரூற்றுசரியாக உபயோகப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. அழகாக வண்ணம் தீட்டப்பட்டு காட்சி தரும் இந்தசெயற்கை நீருற்று, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மீன் வடிவங்களின் வாயிலாக நீரை வெளியேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டால் மாலை நேரங்களில் ஜொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குழந்தைகளும் ரசித்து மகிழ்வார்கள். அதேபோல மற்ற நீரூற்றுகளும் முறையாக பராமரிக்கப்படாததால் பெரும்பாலான நேரங்களில் செயல்படுவதில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவில் கூடுதல் கவனம் செலுத்தி பழமையான மீன் நீரூற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இத்துடன் உயர் மணிக்கூண்டுகளும் ஆங்காங்கே செயல்படாமல் தவறான நேரத்தை காட்டியவாறே நிற்கின்றன. அதையும் சரிசெய்து தர வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “பழமையான நீரூற்றின் அடித்தளத்தில் குழாய் இணைப்புகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளன. தற்போது மீன் வடிவங்களை சுற்றி நீர் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் பழையபடி மீன்கள் வழியே நீரூற்றை செயல்படுத்துவது என்பது கடினமான செயலாகும். முழுவதுமாக நீரூற்றை அகற்றி மறுசீரமைப்பு பணி மேற்கொண்டால்தான் இது சாத்தியமாகும். இதுகுறித்து சரியான திட்டமிடலுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
அண்ணாநகர் பூங்காவில் படகு பயணம் ஏற்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “படகு சவாரியை அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினால் நிச்சயம் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடையே கருத்து கேட்க வேண்டியது அவசியம்.
அதேபோல துறை சார்ந்த அதிகாரிகளிடம் சரியான பாதுகாப்பு ஆலோசனைகள், படகு பயணத்துக்கான வசதிகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் கருத்துகளை பெற வேண்டியது முக்கியமாகும். அதனடிப்படையில் வருங்காலத்தில் சரியான திட்டமிடலின் படி பொதுமக்கள் விரும்பினால் படகு சவாரி சாத்தியமாகலாம்” என்றார்.