

மதுரை: ஓய்வுக்குப் பின்பும் ஆன்மிகத் தில் ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்டு வருகிறார் 71 வயது ஆசிரியை டி.வசந்தகுமாரி. மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் டி.வசந்தகுமாரி (71). இவர் மதுரை வசந்தநகர் தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்பள்ளியில் 1976 முதல் 2010-ம் ஆண்டு வரை பணியாற்றியவர்.
பணி ஓய்வுக்குப்பின் வீட்டில் ஓய்வெடுக்காமல் எழுத்துப் பணியே உயிர் மூச்சாக கருதி எழுதி வருகிறார். இவர் ஆன்மிகத்தில் பல ஆய்வுகளை மேற் கொண்டு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு உறுதுணையாக அவரது கணவர் சிட்கோ பொதுமேலாளராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ராம கிருஷ்ணன் மற்றும் அமெரிக்காவிலுள்ள அவரது மகன் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.
நாடு முழுவதும் சைவ, வைணவத் தலங்களுக்கு சென்று ஆய்வு செய் துள்ளார். இதுவரை சுமார் 5 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியவர் அதனை நூல் களாக வெளியிட்டு வருகிறார்.
இதுகுறித்து டி.வசந்த குமாரி கூறியதாவது: உத்தம பாளையம் அருகே அம்மாபட்டி எனது சொந்த ஊர். விவசாயியான எனது தந்தை திருப்பதி கல்வியைத் தந்து உயர்த்தினார். ஆசிரியர் பணிக்காக மதுரைக்கு வந்தேன். ஆசிரியர் பணியின்போதே ஆன்மிக ஈடுபாடு அதிகமாக இருந்தது.
ஓய்வுக்குப்பின் முடங்கிவிடாமல் ஆன்மிகம் குறித்து பிஹெச்.டி. ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். வழிகாட்டி ஆலோசனையின்படி ‘சகல ஐஸ்வர்யங்கள் தரும் சர்வம் சிவமயம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன். இதற்காக இந்தியா முழுவதும் சைவ, வைணவத் தலங்களுக்கு சென்றுள்ளேன். தேவாரப் பாடல்கள் பாடிய 276 சிவத்தலங்களுக்கும் சென்றுள்ளேன்.
வடமாநிலங்கள், தென் மாநிலக் கோயில்களின் புராணங்கள் குறித்து ஒப்பீடு செய்துள்ளேன். 2020 விஜயதசமியில் முதல் நூல் வெளியிட்டேன். அடுத்தடுத்து சிவவிர தங்கள், சிவச்சின்னங்கள், முருகனின் அறுபடை வீடுகள் இருப்பதுபோல் விநாயகருக்கும், ஐயப் பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளது குறித் தும் ஆய்வு செய்துநூல் வெளியிட்டுள்ளேன். சிவாலய ஓட்டத் தலங்கள்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் கோயில்கள், நவக் கயிலாய தலங்கள் என பல தலைப்புகளில் ஆய்வு செய்துள்ளேன். இதுவரை சுமார் 5 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதி உள்ளேன். அவற்றை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
என் உயிருள்ள வரை எழுதிக் கொண்டிருப்பேன். எழுதிக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் வெளியூர் செல்லும்போது குறிப்பெடுப்பதற்கு முதலில் நோட்டு புத்தகங்கள் தான் எடுத்து வைப்பேன். தினமும் குறைந்தது 5 மணிநேரம் எழுதுவேன். ஆன்மிகம் மூலம் மனம் பக்குவம் அடைந்துள்ளது.
மற்றவர்களின் மீது அன்பு செலுத்த முடிகிறது. எந்த செயலிலும் பொறுமை, நிதானம், அமைதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு என்னால் இயன்றளவு உதவி செய்து வருகிறேன். எழுத்தே உயிர்மூச்சாக வாழ்ந்து வருகிறேன். இதனை கடவுள் அளித்த வரமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.