

திரைப்படங்களுக்கு முன்னோடியான நாடகங்கள் தொடங்குவதற்கு முன், பல நூற்றாண்டுகளாக நமது இந்திய கலாச்சாரம், ஆன்மிக கதைகள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை நாடு முழுவதும் கொண்டு சென்று மக்களின் மனதில் ஆழ பதிய வைத்தவர்கள் தோல் பொம்மலாட்டக்காரர்கள். முகலாயர்கள் ஆட்சி நடைமுறைக்கு வந்த பின்னர் இவர்கள் ஒடுக்கப்பட்டனர். ஆயினும் சில கலைஞர்கள் பயப்படாமல் ஆன்மிக ஆவலை, தோல் பொம்மலாட்டம் மூலம் நாடு முழுவதும் பரவ செய்தனர். இந்த கலை தற்போது மெல்ல மெல்ல அழிந்து வந்தாலும், பொம்மலாட்ட கலைஞர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நாடகங்கள் மூலம் நமது முன்னோர்கள் ராமாயணம், மகாபாரதம் உட்பட பல்வேறு சமூக கதைகளை இந்த சமூகத்துக்கு வழங்கி உள்ளனர். நாடகத்தின் தந்தை என்று தோல் பொம்மலாட்டத்தைக் குறிப்பிடுகின்றனர். மின்சார வசதி இல்லாத காலகட்டத்தில், பொம்மலாட்டம்தான் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகும். இது இரவு நேரங்களில், வெளிச்சத்தின் நிழலில் திரை மறைவில் இருந்து நடத்தும் ஒரு கேளிக்கை கலையாகும். இவர்கள் அதிகமாக ராமாயணம், மகாபாரத கதைகளிலேயே அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்கள் ஒரு நாடோடி போல் ஊர் ஊராக சென்று அங்கு சுமார் மாத கணக்கில் கூடாரம் அமைத்து, ராமாயணம், மகாபாரதக் கதைகளை நடத்துவர். இவர்களுக்கு அந்த ஊர் நாட்டாமையோ, ஜமீன்தாரோ உணவு அளித்து மக்களுக்காக இந்த தோல் பொம்மலாட்ட கலைஞர்களை ஊக்குவிப்பர். சுதந்திர போராட்டத்தின்போது நம்முடைய ரத்தத்தில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தவும் இவர்கள் தவறவில்லை.
இதனிடையே இந்து ஆன்மிக இதிகாசங்களையே அதிகம் மக்களிடையே இவர்கள் கொண்டு சென்றதால், இவர்களை முகலாய அரசர்கள் ஊரை விட்டு விரட்டினர். இதனால், இவர்களின் குடும்பமும் பிரிய தொடங்கி விட்டது. இப்போது சில குடும்பங்கள் மட்டும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தோல் பொம்மலாட்ட கலைஞர்கள் இன்னமும்உள்ளதை அறிந்து இந்து தமிழ் திசை சார்பில் நாம் அவர்களை நேரில் கண்டு, இப்போது அவர்கள் எப்படி உள்ளனர்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? என்பதை அறிய ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நிம்மலகுண்டா எனும் குக்கிராமத்துக்கு சென்றோம். இது கர்நாடக மாநிலத்தின் எல்லையில் உள்ளது. அங்கு தேசிய விருதினை 2 முறை பெற்ற தோல் பொம்மலாட்ட கலைஞரான குய்யப்பா என்பவரின் வீடு தேடி சென்று, அவரை சந்தித்து உரையாடினோம்.
அப்போது அவர் இந்து தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: தோல் பொம்மலாட்டத்தின் பூர்வீகம் மகாராஷ்டிர மாநிலம். சத்ரபதி சிவாஜி இதனை விரும்பி பார்ப்பார். ஆதலால், அவரது அரசரவையில் அடிக்கடி ராமாயணம், மகாபாரத கதைகள் தோல் பொம்மலாட்டம் மூலமாக எடுத்துச்சொல்லப்பட்டன. நாங்கள் அரசர்களுக்கு உளவாளிகளாகவும் பணியாற்றி உள்ளோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோல் பொம்மலாட்டம் பிரசித்தி பெற்ற ஒரு கலையாக இருந்தது. நாடக கலைக்கு தந்தை என தோல் பொம்மலாட்டத்தை நாங்கள் கூறுவோம். நாங்கள் இப்போதும் மராட்டிய மொழியைத்தான் பேசுகிறோம்.
நாங்கள் தான், ராமாயணம், மகாபாரத கதாபாத்திரங்கள் எப்படி, எந்த உருவத்தில் இருக்கும் என முதன்முதலில் யூகித்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்.
தோல் பொம்மலாட்டத்தை நம் நாட்டில் நான்கு வகையாக பிரிக்கலாம். இவை, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ளன. இதில் கேரள மக்கள் `தோல் பாவை கூத்து’ என்றழைக்கின்றனர். இவர்களின் பொம்மை 3 அடிக்கு மேல் இருக்காது. பொம்மையின் முகத்தில் ஓட்டை இருக்கும்.இது எருமை தோலால் செய்வதாகும்.
கர்நாடகாவில் `தகுலு பொம்பியாட்டா’ என்றழைக்கின்றனர். இவர்களும் 3 அடி பொம்மைகளே செய்வார்கள். ஆட்டுதோலில் செய்து, அதில் வர்ணம் தீட்டி, கயிற்றால் தோல் பொம்மலாட்டம் நடத்துவர்.
ஒடிசாவில் `ராவண் சாயா’ என்றழைக்கின் றனர். இவர்கள் வெறும் 2 அடியில் பொம்மைசெய்வர். இதற்கெல்லாம் தாய் போன்றதுதான் ஆந்திராவில் நடத்தப்படும் தோல் பொம்மலாட்டம். எங்கள் வீட்டில் சுமார் 200, 300 ஆண்டுகளுக்கு முந்தைய தோல் பொம்மைகள் இன்னும் உள்ளன. 6 முதல் 7 அடி கொண்ட இந்த பொம்மைகளுக்கு சுமார் 12 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட திரை வேண்டும்.
ஆட்டுத் தோலில் தயாராகும் பொம்மைகள்: ஆட்டு தோலில் தான் தோல் பொம்மலாட்ட உருவங்கள் இன்றளவும் பொறிக்கப்படுகின்றன. தோலைப் பதப்படுத்தி உருவங்களை வரைந்து வண்ணம் தீட்டுவோம். இவற்றை சுமார் 6 முதல் 7 அடி உயரம் வரை உருவாக்குவோம். பொம்மையை இயக்க 2 பேரும், பாட்டு பாடி பொம்மலாட்டதின் கதையை சொல்ல ஒருவரும், சங்கீத வாத்தியங்களை வாசிக்க இருவரும் என மொத்தம் 5 முதல் 6 பேர் வரை ஒரு பொம்மலாட்டத்தில் பங்கேற்போம். இப்போது காலம், மாற மாற எங்களின் தோல் பொம்மலாட்டம் 95 சதவீதம் அழிந்து விட்டது என்றே கூறலாம்.
எப்போதாவது சில இடங்களில், பொருட்காட்சிகள் நடக்கும் இடத்தில் எங்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி இடம்பெறும்.வடக்கேசிலர் திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளில் பல கலைகளை ஊக்குவிப்போர், பொம்மலாட்ட நிகழ்ச்சியையும் நடத்துவர்.
கைவினை பொருட்களில் கவனம்: இதன் காரணமாக இப்போது நாங்கள் கைவினை பொருட்களை செய்து பொருட்காட்சி நடக்கும் போது அங்கு கடைகள் போட்டு விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இதற்கு மக்களிடையே நல்ல ஆதரவும் வரவேற்பும் உள்ளது. நாங்கள் இங்கேயே தயாரிப்பதால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்கள் குலத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் பிழைக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா, ஹம்பி ஆகிய ஊர்களில் எங்களின் உறவினர்கள் இதேபோல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அங்கு அவர்களை `கில்லே கேதர்’ என அழைக்கின்றனர். நாங்கள் நாடோடிகளாகவே வாழ்ந்துள்ளோம். இதனால் பலர் எங்கு எப்படி சென்றார்கள் என்றே தெரியவில்லை. எங்களின் முன்னோர்கள் இங்கு நிம்மலகுண்டா பகுதியில் வாழ்ந்துள்ளனர்.
பின்னர் விவசாயத்திலும் இவர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது 90 குடும்பங்கள் உள்ளன. இதில் 12 பேருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. எனக்கு 2 முறை தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
எனது தாயார் சிவம்மாவும் ஒருமுறை தேசிய விருதை பெற்றுள்ளார். சலபதி ராவ் என்பவர் பத்ம விருதை பெற்றுள்ளார். யுனெஸ்கோ விருது வழங்கியும் கவுரவிக்கப்பட்டேன். வியட்நாம் பல்கலைக்கழகம் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
சிறந்த ‘கிராஃப்ட் மேன் ஆஃப் தி இயர்’ விருதும் எனக்கு கிடைத்துள்ளது. இவ்வளவு விருதுகளை பெற்றும் நாங்கள் உள்ளூரில் பிரபலம் ஆகவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. எங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அழிந்து வரும் இந்த தோல் பொம்மலாட்டத்தை அழிந்துவிடாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை ஆகும்.
பயிற்சி மையங்கள் அமைத்தால் நாங்கள் இந்தக் கலையை கற்றுத்தர தயாராக இருக்கிறோம். எங்கள் இனம் அழியாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குய்யப்பா வேண்டுகோள் விடுத் துள்ளார்.