

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயில் கடந்த திங்கட்கிழமை வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கோயிலின் தெற்கு வாயில் வழியே குரங்கு ஒன்று கருவறைக்குள் நுழைந்தது. அது உற்சவர் சிலையை நோக்கி முன்னேறியது. இதைப் பார்த்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர், சிலையை அக்குரங்கு தள்ளிவிடலாம் என்று கருதி, அதை நோக்கி ஓடினார். ஆனால் அக்குரங்கு அமைதியாக வடக்கு வாசல் நோக்கிச் சென்றது.
அதன் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் பிறகு கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் கூட்டத்தை எவ்வித தொந்தரவும் தராமல் கடந்து சென்றது. இது, பால ராமரை தரிசிக்க அனுமனே நேரில் வந்தது போல் இருந்ததாக அங்கிருந்த பக்தர்கள் கூறினர்.