

கோவை: மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிக் குப்பம்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 300 ஆண்டுகளாக இரவு முழுவதும் நடைபெறும் இரணியன் தெருக்கூத்து நாடகத்தை கொட்டு பனியையும் பொருட்படுத்தாமல் மக்கள் கண்டு ரசித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகைஅருகே வெள்ளிக்குப்பம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரவு முழுவதும் இரணியன் தெருக்கூத்து நடத்த ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். 300 ஆண்டுகளாக இந்த பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு தை மாதம் முதல் தேதியன்று தெருக்கூத்து ஆசிரியர் கோவிந்த ராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கியது.
பெங்களூரு ஐ.டி நிறுவனத்தின் பணியாற்றும் ஹரி பிரசாத் ,கோவையில் பணியாற்றும் பட்டதாரி கார்த்திக் ஆகியோர் பக்த பிரகலாதன் வேடம் அணிந்து நடித்தனர். மோகனவர்ணன், பார்த்திபன், செந்தில் குமார் ஆகியோர் இரணியன் வேடம் அணிந்து நடித்தனர். நாரதராக சிவக்குமார், எமதூதராக ரகு நாதன், சுக்லாச்சாரியார்களாக கவின் குமார், பிரபு, முத்துக் குமார் நடித்தனர். பல்வேறு வேடங்களில் தனபால், மாணிக்கம், குப்புராஜ் ஆகியோர் நடிக்க, மிருதங்க கலைஞர்களாக ஆறுமுகம், மணி மற்றும் ஹார்மோனியம் நாகராஜ் ஆகியோர் கதைக்கு ஏற்ப பின்னணி இசையமைத்தனர்.
இரணியன் தெருக்கூத்து நாடகத்தை நடத்திய வள்ளி கும்மி ஆசிரியர் கோவிந்த ராஜ் கூறியதாவது: வெள்ளிக்குப்பம் பாளையத்தை சேர்ந்த முன்னோர்கள் 300 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பஞ்சம், பரவிய பல்வேறு தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கடவுளை வேண்டி கிராமத்தில் இரவு முழுவதும் இரணியன் தெருக் கூத்து நாடகத்தை நடத்தினர். அதன் விளைவாக கிராமத்தில் நிலவிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதியில் இரணியன் தெருக் கூத்து நாடகம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கிராமத்தை சேர்ந்தவர்கள் பல ஊர்களில் தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வசித்தாலும் ஆண்டுதோறும் நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற் பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினருக்கும் தெருக் கூத்து நாடகத்தை கற்பித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு என்பன உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கும் வரவேற்பு இருப்பது அத்துறையை நம்பியுள்ள கலைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் பாரம் பரியத்தை என்றும் தமிழர்கள் மறக்க மாட்டார்கள் என்பதற்கு இரணியன் தெருக் கூத்து நாடகம், ஜல்லிக்கட்டு போட்டிகள் உள்ளிட்டவை ஆண்டு தோறும் வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்படுவது சிறந்த சான்றாகும்.