Published : 21 Jan 2024 04:08 AM
Last Updated : 21 Jan 2024 04:08 AM

எழுத்தாளன் எழுத்தை நம்பி வாழும் சூழ்நிலை தமிழில் இல்லை: எழுத்தாளர் தேவிபாரதி வேதனை

படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: எழுத்தாளன் எழுத்தை நம்பி வாழும் சூழ்நிலை தமிழில் இல்லை என சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் தேவிபாரதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

களம் இலக்கிய அமைப்பு சார்பில், தேவி பாரதியின் நீர்வழிப் படூஉம் நூல் அறிமுக விழா மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்றதற்கான பாராட்டு விழா ஆகியவை திருச்சியில் நேற்று நடைபெற்றன. செந்தில் குமார் தலைமை வகித்தார். எஸ்.சோம சுந்தரம் வரவேற்றார்.

நிகழ்வில், நீர் வழிப்படூஉம் நூலின் ஆசிரியரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் தேவி பாரதி ஏற்புரையாற்றி பேசியது: எல்லோரும் எதிர்பார்த்தது போல நீர்வழிப்படூஉம் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இந்த நாவல் முழுவதும் ஒவ்வொரு வரியும், எழுத்தும் சந்தேகத்துடனேயே எழுதப்பட்டது. ஒரு படைப்பாளி எல்லா விஷயத்திலும் நிறைவடைய முடியாது. ஏனென்றால், நம்மிடையே எழுத்தாளனுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

பெரிய சிரமத்துக்கு இடையேதான் எழுத்தாளனால் எழுத முடிகிறது. எழுத்தாளன் எழுத்தை நம்பி வாழும் சூழ்நிலை தமிழில் இல்லை. இது தான் தமிழ் எழுத்தாளர்களின் தோல்விக்கு காரணமாக அமைகிறது. அதேவேளையில், மலையாளம், பெங்கால் போன்ற மொழிகளில் எழுத்தை நம்பி வாழலாம். கரோனா காலத்தில் எழுதப்பட்ட நீர்வழிப்படூஉம் நூலை, குளுக்கோஸ் சாப்பிட்டுக் கொண்டே எழுதினேன். இந்நூலில் உள்ள கதா பாத்திரங்கள் எனக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால், இந்த நூலை எழுதியது திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கவிஞர் நந்த லாலா வாழ்த்திப் பேசியது: "மகாத்மா காந்தியின் ஆகச் சிறந்த சிறு கதைகளை அதிகம் எழுதியதில் பெருமைப் படக்கூடியவர் தேவி பாரதி. இவர், தான் எழுதிய 4 நூல்களிலும் மொழி நடையை வேறு வேறாக எழுதி, தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். பிம்பங்களை உடைக்கக் கூடிய எழுத்தாளனே சிறந்த எழுத்தாளன் என்ற வகையில், இவரது எழுத்துக்கள் கற்பனைகளை மீறி சமகால சிந்தனைகளுடன் எழுதப்பட்டுள்ளது.

இந்நூலில் உள்ள அனைத்து கருத்துகளும், நீர் வழிச் செல்லும் தெப்பம் போல வாசகர்களுக்கு அமைந்துள்ளது. அழகிய தமிழ்ச் சொல்லாடல் அதிகளவில் உள்ளது. ஊர் மண்ணை மொழியாக்கி, உறவின் வாசத்தை வெளிப் படுத்தியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்தாளர் குப்புசாமி பேசியபோது, “தேவி பாரதி தன்னை வருத்தி, சித்திரவதைப்படுத்திக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார். எனவே தான், இந்நூலில் ரத்தமும், சதையும் கலந்த பாத்திரங்கள் அதிகம் உள்ளன. தேவி பாரதியின் நூல்கள் அனைத்திலும், இலக்கிய புனைவு மற்றும் மனித செயல்பாடுகள் அதிகளவில் உள்ளன” என்றார்.

நிகழ்ச்சியில், கவிஞர் சின்னசாமி, ரமேஷ் பாபு, ஜெய பால் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அமைப்பாளர் துளசி தாசன் தொகுத்து வழங்கினார். அரு.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x