கண் அழுத்த நோயால் இந்தியாவில் 1.20 கோடி பேர் பாதிப்பு
சென்னை: இந்தியாவில் 1.20 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு அந்நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னையில் நேற்று டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வால், மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் சவுந்தரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விழிப்புணர்வு இல்லை: உலகம் முழுவதும் 7.76 கோடி பேரும், இந்தியாவில் மட்டும் 1.20 கோடி பேரும் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். பலருக்கு அந்நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லை. விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியர் சேம்பர்) சுரக்கும் நீரின் அழுத்தம் (இன்ட்ரா ஆக்குலர் பிரஷர்) இயல்பு நிலைக்கு மாறாக அதி கரித்தால் அதுவே கண் நீர் அழுத்த நோய் எனப்படுகிறது.
இதை அலட்சியப்படுத்தினால் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பார்வை இழப்பு ஏற்படக்கூடும். கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும் மூன்றாவது முக்கிய காரணியாக இந்த நோய் உள்ளது. ஆரம்ப நிலையிலேயே மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால் பார்வை இழப்பைத் தடுக்க முடியும். நோயின் தன்மையைப் பொருத்து பெரும்பாலும் சொட்டுமருந்துகளே இதற்கு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் 63 வயதான நோயாளி ஒருவர் கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இத்தனை ஆண்டுக் காலம் சொட்டு மருந்து பயன்படுத்தி வந்த அவருக்கு, தீர்வு அளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஊடுருவல் (எம்ஐஜிஎஸ்) எனப்படும் சிறு அறுவை சிகிச்சை அளிக் கப்பட்டது.
இதன் மூலம், அவரது பாதிப்புவீரியம் பெருமளவு குறைக்கப்பட்டது. சொட்டு மருந்து பயன்படுத்த வேண்டிய அவசியமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
