

சிவகங்கை: சிவகங்கை அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமிகள் பங்கேற்ற பாரம்பரிய குப்பி பொங்கல் விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே முத்தூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி ஆண்டுதோறும் தை மாதம் சிறுமிகள் குப்பி பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். அதன்படி இந்த ஆண்டு மார்கழி 1-ம் தேதியிலிருந்து அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் விரதம் இருந்தனர். தொடர்ந்து அவர்கள் மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசல்களில் கோலமிட்டு சாணத்தில் வைக்கப்படும் பூசணிப் பூவையும், சாணத்தையும் ஒரு சொம்பில் சேகரித்து வந்தனர்.
தை 2-ம் நாளான நேற்று முன்தினம் இரவு அந்த செம்பில் ஆவாரம் பூ வைத்தும், அலங்கரித்தும் வீடுகளில் இருந்து குப்பியை ஊர்வலமாக கிராம தேவதையான உச்சி காளியம்மன் கோயில் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், சிறுமிகள், பெண்கள் இணைந்து கும்மி கொட்டினர். பின்னர் குப்பியை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகேயுள்ள கோயில் குளத்தில் கரைத்தனர். தொடர்ந்து காலி சொம்பில் புனித நீர் எடுத்து உச்சி காளியம் மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெறும் இந்த குப்பி பொங்கல் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.