

வாரணாசி: வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கு நோக்கில் காசியில் இருந்து அயோத்திக்கு ஸ்கேட்டிங் செய்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார் சோனி சௌராசியா எனும் பெண். அவரது இந்த சாகசப் பயணம் குறித்து பார்ப்போம்.
“அயோத்தியில் புதன்கிழமை (ஜன.17) கணேச பூஜை தொடங்குகிறது. அன்றைய தினம் நான் காசியில் இருந்து அயோத்தி நோக்கிய எனது ஆன்மிக பயணத்தை தொடங்குகிறேன். வரும் 22-ம் தேதியை மக்கள் தீபாவளி திருநாளாக கொண்டாட வேண்டும். இந்த பயணம் சுமார் 228 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. ஜான்பூர், சுல்தான்பூர் வழியாக அயோத்தி செல்கிறேன். இந்த இடங்களில் தேவையான ஓய்வும் எடுத்துக் கொள்கிறேன்.
20-ம் தேதி நான் ராமர் கோயில் வளாகத்தில் இருப்பேன். ஏனெனில், அனைத்து அழைப்பாளர்களும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும். அதனால் தான் முன்கூட்டியே செல்கிறேன்” என சோனி தெரிவித்துள்ளார். சுமார் 124 மணி நேரம் கதக் நடனம் ஆடிய காரணத்துக்காக கின்னஸ் சாதனையும் அவர் படைத்துள்ளார்.
அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.