Published : 16 Jan 2024 10:59 AM
Last Updated : 16 Jan 2024 10:59 AM

குலதெய்வங்களாக வணங்கப்படும் ஜல்லிக்கட்டு கோயில் காளைகள்!

கோயில் காளையும் பண்டைய தமிழரும். | கோப்புப் படம்

மதுரை: ‘கன்று வீட்டைக் காக்கும், கோயில் காளை ஊரைக் காக்கும்’ என்ற பலமான நம்பிக்கை இன்றும் கிராமத்து மக்களிடம் நிலவுகிறது. அதனாலேயே, ஒவ்வொரு கிராமக் கோயில்களிலும் வளர்க்கப்படும் காளைகள் விவசாய நிலத்தில் புகுந்தாலும் பயிர்களை தின்றாலும் விவசாயி வருத்தப்படுவதில்லை.

எந்தப் பயிரையும் கோயில் காளை எப்போது வேண்டுமானாலும் மேயலாம். தை மாதம் பொங்கலன்று கோயில் காளைகளுக்கு உரிய மரியாதையே தனி. அதனாலேயே, உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு விழாக்களில் வாடி வாசல்களில் முதலில் அந்த ஊர்களின் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. அந்தக் காளைகளை வீரர்கள் அடக்க மாட்டார்கள். அதற்கு வழிவிட்டு ஒதுங்கி விடுவர்.

கோயில் காளைகளுக்கு காளையன், கருப்பன், மயிலன், புல்லன், காரி, கட்டையன், செவலையன் காராளன், கொம்பன், கூளையன், சுழியன், காங்கயன், வெள்ளையன் செவலையன், நந்தி வர்மன், நந்த கோபாலன் என்றெல்லாம் பெயர்களைச் சூட்டி பக்தியை வெளிப்படுத்துவர். கோயில் காளைகளையும், பசுமாடுகளையும் தெய்வமாக பழந் தமிழர்கள் வணங்கி வந்துள்ளனர். மாட்டுப் பொங்கல், ஜல்லிக்கட்டு திருவிழாக் களை நடத்தி உள்ளனர். ஆனால், தற்போது பொங்கல் பண்டிகைக் காலங்களில் மட்டுமே மாடுகள் போற்றப்படுவதாகவும், மற்ற காலங்களில் அதற்கான முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாகவும் பண்பாட்டு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் ஒ.முத்தையா கூறியதாவது: மனிதனுக்கும் மாடுகளுக்குமான உறவும் பிணைப்பும் நீண்ட நெடிய மரபுத் தொடர்ச்சி கொண்டது. சங்க இலக்கியமான முல்லைக் கலி மாடு சார்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாட்டு அடையாளத்தின் உச்சம் எனலாம். அன்றிலிருந்து இன்றுவரை மக்களின் வாழ்வோடு கலந்து வாழும் மாடுகளுக்குத்தான் எத்தனை பெயர்கள். உழவு மாடு, வண்டி மாடு, பொதிமாடு, கமலை மாடு, இறவை மாடு, பால்மாடு, பட்டிமாடு, கிடைமாடு, பூம்பூம் மாடு, சாமிமாடு, கோயில்மாடு, தம்பிரான் மாடு, அடிமாடு, பிடிமாடு என்று பலவகை மாடுகள் உள்ளன.

அதுபோல், பட்டிப் பொங்கல், தொழுப்பொங்கல், மாட்டுப் பொங்கல், மாடு ஓட்டம், மாடு மறித்தல், தம்பிரான் வழிபாடு, மாட்டுப் பந்தயம், வண்டிப் பந்தயம், உடை அடித்தல், லாடம் கட்டுதல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, வாய்ப்பூட்டு, குறி சூடு, மாட்டு வாகடம், நாளேர் பூட்டுதல், மாடு ஆட்டம், கன்று காணிக்கை என்று மாடு சார்ந்த பண்பாட்டு பழக்க வழக்கங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகும்.

மேய்ச்சலில் ஈடுபடும் பலரும், புல்லாங்குழல் இசைப்பதை இன்றளவும் காண முடியும். மேய்ச்சல் தொழிலை மரபுவழியாகச் செய்து வரும் இனத்தார்களுக்கு புல்லாங்குழல் கால்நடைகளை வசியப்படுத்தும் கலைக் கருவியாகப் பயன்பட்டு வந்துள்ளது. காட்டு மூங்கில்கள் கால்நடைகளைக் கவரும் இனிமையான புல்லாங்குழலைத் தந்துள்ளன. “அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை” ( திருக்குறள்-1228 ) என்று ஆயன் வாசிக்கும் புல்லாங்குழல் பற்றி திருவள்ளுவரும் எடுத்துக்காட்டி உள்ளார்.

கம்பளத்து நாயக்கர் களுக்கு கோயில் மாடுகளின் மேல் மிகுந்த பக்தியும், நம்பிக்கையும் உண்டு. அவர்கள் மாட்டுப் பொங்கலின்போது கோயில் காளைகளுக்கு முன் நீளமான புல்லாங் குழல்களை ஊதிக்கொண்டு காளைகளை அழைத்துச் செல்வதை இப்போதும் காணலாம். புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு அவர்கள் ஆடும் பில்லகொய்லு ஆட்டத்தை வேறு எங்கும் காண முடியாது.

கோயில் காளை இறந்து விட்டால் ஊர் கூடி ஒப்பாரி வைத்து தங்கள் வீட்டில் ஒருவர் இறந்து விட்டது போல கருதி மாலை, மரியாதை ஈமச் சடங்குகள், வேட்டிக் கட்டு, கொம்பு காணிக்கை செய்து அடக்கம் செய்வர். மக்களும் மாக்களும் ஒன்றிணையும் அன்பின் மையப் புள்ளியாகக் கோயில் காளைகளின் மறைவு நிகழ்வு அரங்கேறும். காளைகளின் பயன்பாடு கருதித்தான் முன்னோர் அதற்கென்று தனியாக விழா எடுத்துள்ளனர். இறந்த கோயில் காளைகளுக்குக் கோயில் கட்டி விழா எடுக்கின்றனர்.

ஒ.முத்தையா

கோயில் காளைகளைக் குலதெய்வமாக வழிபடும் மரபு, காளை வழிபாடு, கன்று, காளை பொம்மைகளின் காணிக்கை இன்றும் தொடரும் நிகழ்வாகும். பட்டி, தொட்டிகள் மறைந்த தால் கோயில் காளைகளும், ஏர் உழவும், இயற்கை வேளாண்மையும் மங்கி மறைந்து வருகின்றன. பட்டி, தொட்டி. தொழு, தொழுவம் என்பவைதான் இன்று கோம்பைத் தொழு, காளையார்கோவில், மாட்டுப்பட்டி, எருதுபட்டி, காங்கயம், காரத்தொழுவு, தொட்டியம், தொட்டியனூர் என்று மாறியுள்ளன.

காளைகள் வளர்ப்பும், மாட்டுச் சந்தைகளும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகி வருவது கண்கூடு. அடிமாடும், பிடிமாடுகளுமே நம்மிடம் எஞ்சியுள்ளன. மாட்டுப் பொங்கல் வெறும் சடங்காக வலுவிழந்து வருகிறது. மேய்ச்சல் சமூகம் பெரிதும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொன்மையான இனக்குழு. கால்நடைகள் ஆதி இயற்கையின் அன்புக் கொடை, கோயில் காளைகள் பண்பாட்டின் மரபுக் கொடை. காளைகளே நமது செல்வம், மரபு, பண்பாடு எல்லாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x