

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் ஜன. 23-ம் தேதி நடைபெறும் 200 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார் செவ்வாய் பொங்கல் விழாவில் 923 குடும்பங்கள் பொங்கல் வைக்க தயாராகி வருகின்றன.
நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன், அப்பகுதி நகரத்தார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய செவ்வாய் பொங்கல் வைத்து வருகின்றனர். இந்த பொங்கல் விழா ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை நடக்கிறது. இதற்காக திருமணம் முடித்த ஆண் வாரிசுகளின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாக கணக்கிடுவர்.
விழாவுக்கு முந்தைய நாள் காலை நகரத்தார் நகர மாளிகையில் கூடும் அவர்கள், முதல் பானையில் பொங்கல் வைப்பவரை தேர்வு செய்வர். இதற்காக புள்ளிகளாக கணக்கெடுக்கப் பட்டோரின் பெயர்களை சீட்டில் எழுதி வெள்ளி பானையில் இடுவர். பின்னர் குலுக்கல் முறையில் ஒருவரை தேர்வு செய்வர். அக்குடும்பத்தினருக்கு விழா நாளில் கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் மரியாதை கொடுக்கப்படும். மேளதாளத்துடன் வந்து கோயில் முன் முதல் பானையாக பொங்கல் வைப்பர்.
அவர்கள் மண் பானை, மண் அடுப்பில் பொங்கல் வைத்தவுடன், அவர்களை தொடர்ந்து மற்ற நகரத்தார் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைப்பவர். அதேபோல் 5 காரணக்காரர்கள் என்று அழைக்கப்படும் மற்ற சமூகத்தினரும், நேர்த்திக்கடன் செலுத்துவோரும் பொங்கல் வைப்பர். பின்னர் பெரிய கருப்பண சாமி கோயில் சாமியாடியை அழைத்து வந்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கோயிலுக்கு பொது கிடா வெட்டியதும், முதல் பானையில் பொங்கல் வைத்தவரின் கிடா வெட்டப்படும்.
அதைத் தொடர்ந்து மற்றவர்கள் கிடா வெட்டுவர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். குழந்தை பிறப்புக்கு வேண்டிக் கொண்டவர்கள், திருமண நாள் சேலையில் கரும்பில் தொட்டி கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு 923 குடும்பத்தினர் செவ்வாய் பொங்கல் வைக்க தயாராகி வருகின்றனர்.
இது குறித்து கோயில் தக்கார் மெ.ராம.முருகப்பன் கூறியதாவது: கடந்த 1963-ம் ஆண்டே திருவிழா நடத்த 21 வகைய றாக்களை குடவோலை முறையில் முன்னோர்கள் தேர்வு செய்துள்ளனர். சுழற்சி முறையில் ஒவ்வொரு வகையறாவாக விழாவை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு சுப.ராம.வகையறா நடத்தினர். இந்த ஆண்டு கண.மெ.வகையறா நடத்துகின்றனர். கடந்த ஆண்டு 912 குடும்பங்கள் பொங்கல் வைத்தனர். இந்த ஆண்டு 923 குடும்பங்கள் பொங்கல் வைக்கின்றனர்.
அதேபோல் முதல் பானையில் பொங்கல் வைப்பவரையும் குடவோலை முறையிலேயே தேர்வு செய்வோம். அனைவரும் வெண் பொங்கல் தான் வைப்போம். இப்பகுதியைச் சேர்ந்த பலர் தொழில் நிமித்தமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கின்றனர். எங்கிருந்தாலும் செவ்வாய் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்துவிடுவர். இந்த விழாவின் போது வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடக்கும். உறவினர்களை ஒன்று சேர்க்கும் விழாவாக, செவ்வாய் பொங்கல் விழா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.