Published : 13 Jan 2024 09:53 AM
Last Updated : 13 Jan 2024 09:53 AM

குடும்பத்துக்கு நேரம் செலவழிப்பது எப்படி?- கவனம் பெற்ற இன்போசிஸ் நாராயண மூர்த்தி கருத்து

வாரத்தில் 85 மணி நேரம் முதல் 90 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்ததால் கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளான இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, தற்போது குடும்பத்துக்கான நேர மேலாண்மை குறித்து கருத்து தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார். “எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதைவிட குடும்பத்தாருடன் எத்தனை தரமான நேரம் செலவழிக்கிறோம் என்பதே முக்கியம்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பணியில் அதீத கவனம் செலுத்துவதால் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்று வருந்தியதுண்டா? உங்கள் மகள் அக்‌ஷரா மூர்த்தி உங்களைப் பற்றி ‘போனஸ் டேட்’ அதாவது நீங்கள் அவர்களுக்காக இருப்பதே போனஸ் போன்றது என்று தெரிவித்துள்ளாரே என்று கேள்வி எழுப்பபட்டது.

இதற்குப் பதிலளித்த நாராயணமூர்த்தி, “அவ்வாறாக நான் வருந்தியதில்லை. ஏனெனில் நான் எப்போதேம் அளவைவிட தரமே முக்கியம் எனக் கருதுகிறேன். அதிகாலை 6 மணிக்கு நான் அலுவலகம் செல்வேன். 9.15 மணிக்கு வீடு திரும்புவேன். குழந்தைகள் எனக்காக தயாராக வாசலில் காத்திருப்பார்கள். நான், என் மனைவி சுதா, என் குழந்தைகள், என் மாமனார் எல்லோரும் என் காரில் ஏறுவார்கள். நாங்கள் அவர்கள் விரும்பும் உணவை உண்ணச் செல்வோம். அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். அந்த 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை என் குழந்தைகள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்.

குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே விதிதான். எனது சகோதரிகள் உள்பட அனைவருக்கும் அதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நீங்கள் யாவரும் நன்றாக இருக்கும்போது நான் உங்களுக்குத் தேவைப்பட மாட்டேன். ஆனால் உங்களில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சினை என்றால் உங்களுக்காக நான் இருப்பேன். அந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் வெளியேற உதவியாக இருப்பேன். நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நான் உங்களை மருத்துவமனையில் அனுமதிப்பேன்” என்றார்.

70 மணி நேரம் பணி செய்ய வேண்டும்.. வாரத்துக்கு 70 மணி நேரம் பணி செய்ய வேண்டியது அவசியம் என்று தனது கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். “நான் முன்பே சொன்னது போல் ஒரு இளம் இந்தியர் சராசரியாக வாரத்துக்கு 70 மணி நேரம் பணி செய்ய வேண்டும். இந்தியர்களாகிய நாம் வரிப் பணத்தில் நிறைய சலுகைகளை அனுபவிக்கிறோம். அவ்வளவு சலுகைகளை அனுபவிக்கும்போது சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வாழ்வு செழிக்க நான் கடுமையான உழைப்பை செலுத்துவது நமது பொறுப்பு. நான் ஓய்வு பெறும் நாள் வரை 85 முதல் 90 மணி நேரம்வரை பணியாற்றினேன். 70 என்ற எண் முக்கியமல்ல, கடின உழைப்பே முக்கியம்.

உங்கள் வேலை பலன் தருவதாக இருக்க வேண்டும். ஜெர்மானியர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உழைத்ததுபோல், ஜப்பானியர்கள் உழைத்ததுபோல் உழைக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை சிறிதளவேனும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x