

சிங்கம்புணரி: பிரான்மலை அரசு சித்த மருத்துவமனையில் நீராவி குளியல், தொக்கண சிகிச்சை (மசாஜ்), வர்ம சிகிச்சை அளித்து எலும்பு மூட்டு வலி உள்ளிட்ட உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளோரை குணப்படுத்தி வருகிறார் மருத்துவர் சரவணன். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை அடிவாரத்தில் இயற்கை எழில்மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
அந்த வளாகத்தில் அரசு சித்த மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உதவி சித்த மருத்துவ அலுவலராக பணிபுரிபவர் சரவணன் (45). இவர் சித்த மருத்துவம் மூலம் மூட்டு, இடுப்பு, கழுத்து வலியை குணப்படுத்தி வருகிறார். இதனால் சிவகங்கை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். வழக்கமான சித்த மருத்துவ சிகிச்சையுடன் நீராவி குளியல், வர்மம், தொக்கண சிகிச்சை, யோகா பயிற்சியையும் அளித்து வருகிறார்.
மருத்துவர் சரவணன் எலும்பு சிகிச்சை மட்டுமின்றி பெண்களுக்கான சினைப்பை நீர்க்கட்டி, மாதவிடாய் பிரச்சினை, வயிற்று வலி, ஒற்றை தலைவலி போன்றவற்றுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்.
அவரது முயற்சியில் இம் மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை வளர்த்து வருகிறார். இவரது சிறந்த சேவையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் 4 முறை விருது வழங்கியுள்ளது.
மருத்துவர் சரவணன் கூறியதாவது: இங்கு 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இடுப்பு, கழுத்து வலி போன்றவற்றுக்கு குறைந்தது 10 நாட்களாவது சிகிச்சை பெற வேண்டும். மேலும் மெத்தையில் படுப்பதை தவிர்த்து, பாய் பயன்படுத்த வேண்டும். தொக்கண சிகிச்சைக்கு உளுந்து தைலம் அல்லது வாதகேசரி தைலத்தை பயன்படுத்துகிறோம்.
உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். நான் ஆண் மருத்துவர் என்பதால் பெண்களுக்கு தொக்கண சிகிச்சை அளிக்க முடியாது. கழுத்து வலிக்கு மட்டும் சிகிச்சை அளிப்பேன். அதிக வலியுடன் வந்தாலும் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் உடனே வலி இல்லாமல் செய்ய முடியும்.
உணவு முறை, மனநலம் குறித்து கவுன்சலிங்கும் அளிக்கிறேன். எனக்கு மாவட்ட சித்தா மருத்துவர் பிரபாகரன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அரசு சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.