

சென்னை: ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பு வழங்கும் 3 நாள் யோக மகோத்சவ நிகழ்ச்சி சென்னை மணப்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த அறிக்கை விவரம்: உள்முக அமைதி மற்றும் தனிப்பட்ட மாற்றத்துக்கு வழிவகுக்கின்ற, இதயம் சார்ந்த தியானப் பயிற்சிகளைக் கற்பிக்கும் ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பு, மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு முழுமையான நிறைவைத் தரக்கூடிய மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இது மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தில் நடைபெற உள்ளது. ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பு லாப நோக்கமற்ற ஒரு உலகலாவிய அமைப்பாகும். 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 5 ஆயிரம் மையங்களைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, கோடிக்கணக்கான மக்களுக்கு இலவசமாக தியானப் பயிற்சிகளை அளித்து வருகிறது.
உயர் நோக்கத்துடன் கூடிய ஒரு வாழ்க்கைமுறையை வாழ்வதற்கான முதல் படியாக மனநிறைவு, உள்முக அமைதி, இரக்க உணர்வு, தைரியம் மற்றும் தெளிவான சிந்தனை போன்ற பண்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கு இந்த பயிற்சி முறைகள், நவீன கால உலகத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் எளிய நுட்பங்களை 15 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் பலதரப்பட்ட மக்களால் எளிதாகப் பயிற்சி செய்ய இயலும்.
முழுமையான நலவாழ்வு மற்றும் உள்ளுணர்வுடன் கூடிய வாழ்க்கை முறையை விரும்புபவர்கள், இந்த நுட்பங்களை மொபைல் பயன்பாட்டின் மூலமும் பெறலாம். ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றம் கல்லூரிகளில் ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெரு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசு அமைப்புகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தியானப் பயிற்சிகளை செய்து வருகின்றனர்.
வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ள யோக மகோத்சவ நிகழ்ச்சிகளைக் காண அனைவரையும் அழைக்கிறோம். பள்ளி மாணவர்களுக்கான யோகா, தியானம், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், கட்டுரை எழுதும் போட்டிகள், விவாத அரங்குகள், கலந்துரையாடல்கள், விளையாட்டுகள் மற்றும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். இதில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை.
நாளை மாலை 5.15 மணிக்கு புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான கலைமாமணி டாக்டர் காயத்ரி கிரிஷ்ஷின் ஆத்மார்த்தமான இசை நிகழ்ச்சியுடன் இந்த திருவிழா தொடங்குகிறது. வரும் 7-ம் தேதி மாலை 3.15 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் ஸ்வராத்மிகாவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து இளைஞர்களுக்கான மழு நாள் நிகழ்ச்சி வரும் 6ம் தேதி நடைபெறும். சமூக உணர்வு, மகிழ்ச்சி மற்றும் முழுமையான நல்வாழ்வை அளிப்பதே இந்த மூன்று நாள் நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஊக்கமளிக்கும் பேச்சாளர் நந்தகுமார் ஐஆர்எஸ், வரும் 6ம் தேதி மாலை 3.30 மணிக்கு இளைஞர்களுக்கு பலன்தரும் வழிகாட்டுதல்களை அளிக்க உள்ளார்.
வரும் 7ம் தேதி காலை 9 மணிக்கு கிட்டி எனும் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இன்னர் ரீ இன்ஜினியரிங் பயிலரங்கை நடத்த உள்ளார். திரைப்பட இயக்குநர் லிங்குசாமி தியானம் பற்றிய தனது அனுபவங்களை பகிர உள்ளார். ஞாயிற்றுக்காலை 11 மணிக்கு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருபவர்கள் தியானம் மற்றும் யோகா அமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது உடல் நலனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்முக ஆய்வு செய்வதற்கும் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வையும் மேம்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். இதயமும் மனமும் ஒன்றாக இணைகின்ற இந்த அழகான வாழ்க்கைப் பயணத்தில் நவீனமும் பாரம்பரியமும் கலந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.