

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரத்தில், மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு அணிவிக்கப்படும் நெட்டி மாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா ஜன.15-ம் தேதியும், மாட்டுப் பொங்கல் ஜன.16-ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மாட்டு பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, நெட்டி மாலை அணிவித்து, அவற்றுக்கு பொங்கல் வைத்து ஊட்டுவது வழக்கம். இதற்காக கும்பகோணத்தை அடுத்த திப்பிராஜபுரத்தில் நெட்டி மாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக நெட்டி மாலை தயாரிக்கும் தியாகராஜன் கூறியது: திப்பிராஜபுரத்தில் பல ஆண்டுகளாக நெட்டி மாலையை தயாரித்து விற்பனை செய்கிறோம். இதற்காக பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, வடசேரி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள குளம் மற்றும் ஏரிகளில் உள்ள தடிமனாக உள்ள நெட்டியை எடுத்துக் கொண்டு இங்கு வருவோம்.
அதை தண்ணீரில் 4 நாட்கள் ஊற வைத்தப் பின், அதன் மேலுள்ள தோலை அகற்றி விட்டு, தேவையான கலர் சாயத்தில் நனைத்து உலர வைப்போம். பின்னர், அதை தாழம்பு நாரில் கோர்த்து, பல்வேறு வகைகளில் மாலையாக தயாரிப்போம்.
எங்களிடம் மொத்தமாக வாங்குபவர்கள் 100 நெட்டி மாலைகளை ரூ.1,000-க்கு வாங்கிச் சென்று, அவர்கள், 1 ஜோடி ரூ.40-க்கு விற்பனை செய்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் நெட்டி மாலைகளை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.