

விருதுநகர்: மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு என்றும் மறையாத, பெருந்தலைவர் என்ற சொல்லுக்குச் சொந்தக்காரரான காமராஜர் முதல்வராக இருந்தபோது அவரை பாராட்டி வழங்கப்பட்ட கேடயத்தை வழக்கம்போல் அந்த இடத்திலேயே அவர் விட்டுச் சென்றார். அந்த கேடயம் விருதுநகர் ரயில் நிலையத்தில் இன்று பொக்கிஷமாக ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியோடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வணிக நகரமாக விளங்கிய விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு 22 கி.மீட்டர் தூரம் தண்டவாளம் அமைத்து 1963-ல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் ரயில்வே இணை அமைச்சர் எஸ்.வி.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவில் விருதுநகர் வியாபார வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் நினைவு கேடயம் ஒன்றும் வழங்கப்பட்டது.
எந்த விழாவாக இருந்தாலும் அங்கு வழங்கப்படும் நினைவுப் பரிசு உள்ளிட்ட எந்தப் பொருளையும் தன்னுடன் எடுத்துச் செல்லாதவர் காமராஜர். அதுபோல, இந்த நினைவுக் கேடயத்தையும் ரயில் நிலையத்திலேயே காமராஜர் விட்டுச் சென்றார். ரயில் நிலையத்தில் பொருட்கள் வைப்பறையில் இந்த கேடயம் சுமார் 54 ஆண்டுகளாக தூசிபடிந்து கேட்பாரற்றுக் கிடந்தது. வடக்கிலிருந்து வந்து பணியாற்றிய ரயில்வே அதிகாரிகளுக்கு காமராஜரைப் பற்றிய அறியாமையும், தெரியாததுமே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2017-ல் விருதுநகர் ரயில் நிலைய மேலாளராகப் பணியாற்றிய சிவகுருநாதன் கண்களில் இந்த கேடயம் பட்டது. அதன்பின்னர், இந்த கேடயத்தை புதுப்பித்து கண்ணாடி பெட்டியில் வைத்து இன்று வரை விருதுநகர் ரயில் நிலையத்தில் பொக்கிஷமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள தகவலைப் படித்து பலரும் ஆச்சரியப்பட்டுச் செல்கின்றனர்.
இதுகுறித்து, முன்னாள் ரயில் நிலைய மேலாளர் சிவகுருநாதன் கூறுகையில், எனக்கு காரமராஜர் வாழ்க்கை முழுவதும் தெரியும். அவரை வழிகாட்டியாக நினைத்து செயல்படுபவன் நான். விருதுநகர்- அருப்புக்கோட்டை ரயில் வழித்தட தொடக்க விழாவில் காமராஜருக்கு வழங்கப்பட்ட கேடயத்தை பார்த்தேன். அதை புதுப்பித்து மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திட்டமிட்டேன். அப்போதைய ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரத்தினவேலிடம் இதுபற்றி கூறினேன்.அவர் ரூ.17 ஆயிரம் செலவில் தேக்கு மரத்திலான கண்ணாடி பெட்டி செய்து கொடுத்தார். ரயில்வே துறை அனுமதியோடு அதை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், பயணிகள் பார்வையில் படும்படி மாட்டி வைத்தோம். இது காமராஜரின் எளிமைக்கும், நேர்மைக்கும் செய்த நன்றிக் கடனாக நினைக்கிறேன். இன்றைய இளைய தலைமுறை
யினரிடம் காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும்போதுதான் புதிய வரலாற்றை அவர்கள் படைக்க முடியும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.