

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே வீரவநல்லூர் கிராமத்தில் பழமையான சிவபாண்டி ஆண்டார் கல்மடம் அமைந்துள்ளது. இந்தக் கல் மடத்தில் இரு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் கூறியதாவது; சில மாதங்களுக்கு முன்பு முனைவர் தவசிமுத்துமாறன் எனக்கு 2 கல்வெட்டுகளுடைய புகைப்படங்களை அனுப்பி இவற்றைப் பிரதி செய்ய முடியுமா? என்று கேட்டார். நான் அவற்றைப் பிரதி செய்ய முயன்றபோது கல்வெட்டுப்படிகள் தெளிவாக இல்லாமல் இருந்ததை அறிந்தேன்.
நண்பர்கள் பால்பேக்கர், பால சுப்பிரமணியன் ஆகியோருடன் வீரவநல்லூர் கிராமத்துக்குச் சென்றேன். வீரவநல்லூரின் பழைய பெயர் வீர கேரளநல்லூர் என்பதை அறிந்தேன். அங்குள்ள கல்மடத்தில் இருந்த இரண்டு கல்வெட்டுகளும் மிகப் பெரியதாக இருந்தன. அதில் ஒரு கல்வெட்டு செப்புப் பட்டய வடிவில் இருந்தது கூடுதல் சிறப்பு. செப்புப் பட்டய வடிவ கல்வெட்டு 1678-ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டில் பாண்டிய மன்னனும் இராமனாச்சியாரும் கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாளும் வழங்கிய தானம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. பிற்காலப் பாண்டிய மன்னர் கி.பி.1641-ம் ஆண்டு வீரகேரள நல்லூர் கல்மடத்தை அமைத்து பட்டயம் மூலம் தானமும் செய்துள்ளார். இவர் வரகுணராம பாண்டியனாக இருக்கலாம்.
அல்லது அவரது காலத்துக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னனாக இருக்கலாம். பனைவிளை, நரசிங்கன் தோப்பு, தோப்பறில் மேத்தியா பிள்ளை நிலத்திலிருந்து வந்த கடமைப் பணத்தையும் தானமாக வழங்கியதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அடுத்து, இராமனாச்சியார் என்பவர் கி.பி.1678-ம் ஆண்டு வீரவ நல்லூர், வடக்கு அத்திப்பட்டி, அகத்து வைக்குடி பற்று ஆகிய பகுதியில் இருந்த நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளார்.
அவற்றில் இருந்து சித்திரை பரணி பூசை, சங்கர மாதம் சிறப்புப் பூசை, பிரதோஷ பூசை, கார்த்திகை மாதம் அத்தாளப் பூசை, திருக் கார்த்திகை நறுநெய்வார்ப்பு, வெஞ்சன வகை, வெள்ளிமலை வேலாயுதப் பெருமாளுக்கு உசர பூசை ஆகியவற்றின் செலவுக்கு நெல் வழங்கப்பட்டது உட்பட பல தகவல்கள் கல்வெட்டில் உள்ளன.
தெற்குப் பக்கம் அமைந்துள்ள 2-வது கல்வெட்டு கி.பி. 1683-ம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. பிள்ளைமார் சமூகத்தவர் பிள்ளையார் பூஜைக்கும், மகேசுவர பூசைக்கும், விசேஷ பூஜைக்கும் கி.பி. 1678-ம் ஆண்டு நிலதானம் செய்துள்ள செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சிவபாண்டி ஆண்டார் கல்மடத்தின் நிலங்கள் மடத்துக்கு ஏற்பட்ட கடன் தொகை 1150 ரூபாயை நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாணார் நயினார் - ஆண்டிச்சி ஆகியோரது மகள் இராமனாச்சியார் வழங்கித் தீர்த்து வைத்துள்ளார்.
சிவபாண்டி ஆண்டாரின் கல்மடத்துக்கு பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாள் என்பவரும் பண தானம் செய்துள்ளார். மடத்தின் செலவுகளுக்குத் தானம் செய்யப்பட்ட நிலம், பாட்டம் பணம், கடமைப் பணம் பற்றிய செய்திகள், மடம் மீட்கப்பட்ட செய்தி ஆகியவற்றை கல்வெட்டு குறிப்பிடுகிறது. தமிழர் வரலாற்று அடையாளமாகத் திகழும் வீரகேரள நல்லூர் கல் மடம் இடிந்து விழும் நிலையிலுள்ளது. எனவே உடனடியாகக் கல் மடத்தையும், கல்வெட்டுகளையும் பராமரித்துப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.