

விருதுநகர்: பொது சேவையில் ஈடுபட என்னிடம் போதிய பணம் இல்லை என்று பலர் ஒதுங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பணம் இல்லாவிட்டால் என்ன? உதவும் எண்ணம் இருந்தால்போதும், உடல் உழைப்பு மூலமும் சேவை செய்யலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமூக சேவகர். ராஜபாளையம் பூபால்ராஜாபட்டி தெருவைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (49). வீட்டில் வைத்து பரிசுப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். பொதுச் சேவையில் விருப்பமுள்ள இவர், இலவச மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் என எந்த ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை எந்த அமைப்போ, கட்சியோ, நிறுவனமோ நடத்தினாலும் அதில் தானாக முன்வந்து சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இது தவிர, மாவட்டம் முழுவதும் கபடி, கோகோ, ஹாக்கி, கூடைப்பந்து, சைக்கிள் ரேஸ், வாலிபால், கராத்தே, சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், மாரத்தான் ஓட்டப் போட்டி, போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி என 300-க்கும் மேற்பட்ட போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்துள்ளார். இதற்காக சங்கர் கணேஷ் யாரிடமும் பணம் பெறுவதில்லை. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள சங்கர் கணேஷ், 7-ம் வகுப்பு படிக்கும்போதிருந்தே சக மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வந்துள்ளார். வகுப்பறையை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுத்து வைப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். சேவை செய்வதில் சிறு வயதில் ஏற்பட்ட நாட்டத்தால், பிற்காலத்தில் தானாகவே முன்வந்து பொது நிகழ்ச்சிகளில் சேவையாற்றும் எண்ணம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சங்கர் கணேஷ் மேலும் கூறியதாவது: 2013-ம் ஆண்டு ராஜபாளையத்தில் பெண்கள் கபடி போட்டி நடந்தபோது அதில் இணைந்து சேவை யாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கினேன். இதைப் பார்த்த வீராங்கனைகள், இவ்வளவு அக்கறையாக இதற்கு முன் யாரும் எங்களுக்கு உணவு வழங்கியதில்லை என்றனர். அன்று முதல் எங்கு விளையாட்டுப் போட்டி நடந்தாலும், அங்கு சென்று என்னால் முடிந்த சேவையைச் செய்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று சேவை செய்வேன்.
100-க்கும் மேற்பட்ட கபடி அணிகளின் தொடர்பு எண்கள் எண்ணிடம் உள்ளன. இதனால், யார் கபடி போட்டி நடத்தினாலும் என்னை அழைத்து, அனைத்து அணிகளையும் தொடர்புகொண்டு போட்டிக்கு வரவைப்பது உங்கள் பணி என்று கூறிவிடுவார்கள். போட்டிகளின்போது வீரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, உணவு பரிமாறுவது, அணிகளை ஒருங்கிணைப்பது, அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்வேன். இதற்காக யாரிடமும் நான் பணம் வாங்கியது கிடையாது. போட்டி நடத்துவோர் சிலர் விருப்பப்பட்டு போக்குவரத்து செலவுக்கு மட்டும் பணம் கொடுப்பார்கள்.
அதோடு, விளையாட்டு விழாக்களில் என்னைச் சிறப்பித்து கவுரவிப்பார்கள். அதையே மிகப்பெரிய விருதாகக் கருதுகிறேன். விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள், அரசு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும் சென்று சேவை செய்து வருகிறேன். பரிசுப் பொருட்கள் விற்பனையின் மூலம் குறைந்த வருமானம் பெற்றாலும், இதுபோன்ற சேவை எனக்கு பெரும் மனநிறைவைத் தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.