Published : 25 Dec 2023 05:19 PM
Last Updated : 25 Dec 2023 05:19 PM

சங்க காலத்திலிருந்தே தொடரும் காட்டுப் பன்றி தொல்லை: விவசாயிகளுக்கு விடிவுகாலம் எப்போது?

மதுரை: காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை அழித்து நாசப்படுத்துவது சமகாலத்தில் மட்டுமல்ல சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது என சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டு நூல் தொகுப்பில் மலைபடுகடாம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு வழங்குவதுபோல் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

காட்டுப் பன்றிகள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ளதால், அவற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வனத்துறையினரிடம் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். காட்டுப்பன்றிகள் தொல்லையால் கடும் நஷ்டம் அடைந்து பயிர் சாகுபடியையே கைவிடும் நிலைக்கு சில விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சமீப காலமாகத்தான் இதுபோன்ற சூழ்நிலை இருப்பதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், சங்க காலத்திலேயே காட்டுப் பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்தியுள்ளதையும், அதிலிருந்து காப்பாற்றுவதற்கு வைக்கும் பொறியில் விவசாயிகள் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எச்சரித்து பத்துப்பாட்டு தொகுப்பில் இடம்பெற்றுள்ள மலைபடுகடாம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று விளை நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை அழித்து வருகின்றன. சமகாலத்தில் மட்டுமல்ல சங்க காலத்திலும் இது நிகழ்ந்துள்ளது. தினைப்புனம் (விளைநிலங்கள்) அழிக்கும் பன்றிகளை அழிக்க பொறிகள் அமைந்துள்ளது பற்றி சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள மலைபடுகடாம் நூலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்:

விளை புனம் நிழத்தலின், கேழல் அஞ்சி / புழைதொறும் மாட்டிய இருங் கல் அடாஅர் / அரும் பொறி உடைய, ஆறே; நள் இருள் / அலரி விரிந்த விடியல், வைகினிர், கழிமின் - மலைபடுகடாம் - 195

இதன் பொருளானது, விளைந்த தினைப்புனத்தைப் பன்றிகள் அழிப்பதால் அப் பன்றிகளை பிடித்து அழிக்க அவை செல்லும் சிறிய வழிகள்தோறும், புகுந்து மாட்டிக்கொள்ளும்படி வைத்த பெரிய கற்பலகையாலான அடார் என்னும் அரிய பொறிகள் நீங்கள் செல்லும் வழிகளில் உள்ளன. எனவே, இவ்வழியில் இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். சூரிய உதயத்துக்குப் பின்பு வயலுக்கு செல்லுங்கள். அரும்பொறி செய்தற்கரிய நுணுக்கங்கள் உடைய இயந்திரம். அதனுள் மாட்டிக்கொள்ளும் பன்றி தப்ப இயலாது. அது செல்லும் பிற வழிகளையும் அடைத்திருப்பர்.

ஒருவழியில் பன்றி வருமாறு தொளை போன்று வழிவைத்து அதனுள் பொறியை மாட்டியிருப்பர். இத்தகு வழியில் கூத்தர்களாகிய நீங்கள் சென்றால் அப்பொறியால் கொல்லப்படுவீர்கள். ஆகையால் எச்சரிக்கையோடு செல்லுங்கள் என கூத்தர்களை வழிப்படுத்துகிறது இந்த பாடல். சங்க காலத்தில் பொறி வைத்து காட்டுப் பன்றியை அழித்தனர். ஆனால், இப்போது விவசாயிகள் சிலர் வனவிலங்குகள் வயலில் புகுவதை தடுக்க சட்டவிரோதமாக மின்வேலியை அமைக்கின்றனர். இதில் சிக்கி அப்பாவி மனித உயிர்களும் பலியாகின்றன. பல நூற்றாண்டுகளாக தொடரும் இப்பிரச்சினைக்கு இன்றைய காலத்திலாவது தீர்வு கிடைக்குமா என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x