Published : 22 Dec 2023 05:39 AM
Last Updated : 22 Dec 2023 05:39 AM

மழை வெள்ளத்தால் பரிதவித்த ரயில் பயணிகளுக்கு வயிறார உணவளித்த மேலூர் புதுக்குடி கிராமம்: பிரதிபலன் எதிர்பாராது மனிதநேயத்துடன் உதவிய மக்கள்

ஸ்ரீவைகுண்டம் மேலூர் புதுக்குடியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் பயணிகளுக்கு உணவு தயாரித்த கிராமத்தினர்.

கோவில்பட்டி: மழை வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயில் பயணிகளுக்கு 2 நாட்கள் வயிறார உணவளித்தனர் மேலூர் புதுக்குடி கிராம மக்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஸ்ரீவைகுண்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த 17-ம் தேதி இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை 9.10 மணிக்குசென்றடைந்தது. நீண்ட நேரமாகியும் அங்கிருந்து ரயில் புறப்படவில்லை. இதனால் பயணிகள் மத்தியில் குழப்பம் நிலவியது.

தண்டவாளத்தில் பெரிய அளவுக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், பயணத்தை ரயில்தொடராது எனவும் இரவு 11 மணிக்குஅறிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி, ரயிலிலும், ரயில் நிலையத்திலும் பயணிகள் அன்று இரவு தூங்கினர். மறுநாள் காலையில் சுமார்6 அடி அளவுக்கு ரயில் நிலையத்தை சூழ்ந்து வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.

சிலர் தண்டவாளம் வழியாகச்சென்று பார்த்தபோது, அருகிலிருந்த மேலூர் புதுக்குடி கிராமம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. அந்த கிராமத்தின் பெட்டிக் கடையிலிருந்து தின்பண்டங்களை அவர்கள் வாங்கி வந்தனர். நிலவரத்தை கேட்டறிந்த கிராம மக்கள் அங்குள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு பயணிகளை வரவழைத்தனர்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எஸ்.முத்துகிருஷ்ணன் கூறியதாவது:

எங்கள் கிராமத்தை 4 அடிஅளவுக்கு தண்ணீர் சூழ்ந்திருந்தது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்குள் தண்ணீர் வரவில்லை. எனவே, ரயில் பயணிகளை அங்கு வரவழைத்தோம். அவரவர் வீடுகளில் இருந்து சிலிண்டர், அடுப்புகள் மற்றும் மளிகைப் பொருட்கள், காய்கறிகளை எடுத்து வந்தோம். பயணிகளில் 4 பேர் சமையல் கலை தெரிந்தவர்கள்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் நாங்கள் கொடுத்த மசாலா பொடி, எலுமிச்சை பழங்கள், தக்காளிகளைக் கொண்டு சாம்பார் சாதம் தயார் செய்தனர். திங்கள்கிழமை மூன்று வேளையும், செவ்வாய்க்கிழமை மதியம் வரையும் உணவு தயாரித்துக் கொடுத்தோம். அதன் பின்னர் மீட்புக்குழுவினர் வந்து விட்டனர்.

பயணிகள் சுமார் 700 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் உணவு தயாரிக்கும் அளவுக்கு எங்களிடம் பாத்திரங்கள் இல்லை. அதனால் முதலில் தயாரித்த உணவை குழந்தைகள், முதியவர்களுக்கும், அதன் பின்னர் மற்றவர்களுக்கும் வழங்கினோம். ரயில் நிலையத்தில் இருந்தமுதியவர்களுக்கு அங்கு கொண்டுபோய் கொடுத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உணவு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்ட தேவகி அம்மாள் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் அனைவரும் வாழை விவசாயிகள். இக்கட்டான நேரத்தில் பசியுடன் வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். வேறுஎந்த பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்றார்.

இக்கிராம மக்களின் இந்த உயரிய தொண்டு ரயில் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பயணிகள் சிலர் பணம் கொடுத்தபோது, கிராம மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து கோயில் உண்டியலில் பணத்தை செலுத்திவிட்டு கிராம மக்களிடம் இருந்து பயணிகள் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x