

திருப்பூர்: அவிநாசியில் தனியார் உணவகத்தில் ரோபோ பரிமாறுவதை குழந்தைகள் பலரும் பார்த்து ரசித்து சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
அவிநாசியில் உள்ள தனியார் உணவகம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் வேலையை கடந்த சில நாட்களாக ரோபா ஒன்று செய்யத் தொடங்கி உள்ளது. இதனை பார்த்த வாடிக்கையாளர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் வியந்து பார்த்ததுடன், சாப்பிட்டு முடித்த கையோடு செல்ஃபியும், உணவு பரிமாறுவதை புகைப்படமும் எடுத்து தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட தற்போது பலரின் ஆச்சர்ய ஸ்பாட்டாக அந்த உணவகம் மாறி உள்ளது.
தனியார் உணவகத்தினர் கூறும்போது, “கடந்த சில நாட்களாக ஒருசர்வரின் பணியை ரோபோ செய்து வருகிறது. சமைத்த உணவை சமையல் கூடத்தின் முன்பு நின்றிருக்கும் ரோபாவில் வைத்துவிட்டால், எந்த டேபிளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அசைன் செய்துவிட்டால் அந்த டேபிளுக்கு சென்று நிற்கும். அதன்பின்னர் அங்கிருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த உணவை எடுத்து சாப்பிடுகிறார்கள்.
தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் பலரும் வியந்து பார்த்து செல்கின்றனர். 8 மணிநேரம் இதன் பேட்டரி செயல்படும். குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதை விட, ரோபோவின் நடமாட்டத்தை தான் அதிகம் நோட்டமிடுகின்றனர். இங்கு மொத்தம் 40 டேபிள்கள் உள்ளன. ரோபோவில் 5 அடுக்குகள் உள்ளன. அதில் உணவை வைத்துவிட்டால், அந்தந்த டேபிளுக்கு சென்று நிற்கும். எந்தெந்த டேபிளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அசைன் செய்தால் போதும். அந்தந்த டேபிளுக்கு உணவு சென்றுவிடும். அவர்கள் உணவை எடுத்துவிட்டு, வாடிக்கையாளர்கள் க்ளோஸ் செய்தால் போதும் அடுத்த டேபிளுக்கு நகர்ந்துவிடும்.
சைனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். ஒரு ரோபோவின் விலை ரூ. 8.50 லட்சம் ஆகும். வித்தியாசமாக வாடிக்கையாளர்களை கவரவே இதனை செய்துள்ளோம். அதேபோல் பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் வகையில் ரோபோ அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று அவர்கள் தெரிவித்தனர்.