

மதுரை: திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் கவுரவமாக வாழ வழிகாட்டியாக இருந்து வருகிறார் மதுரை முனிச் சாலையைச் சேர்ந்த திருநங்கை மேகி. மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், திருநம்பிகள் மீது சமூகத்தின் பார்வை வித்தியாசமானதாகவே இருக்கிறது. அவர்களையும் சக மனிதர்களாகக் கருதும் மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் எனக் கருதிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்றாம் பாலினத்தினத்தவரை திருநங்கைகள், திருநம்பிகள் என்று அழைக்கும் சொல்லை தமிழ்ச் சமூகத் துக்கு அளித்தார். அவர்களுக்கென பல திட்டங்களையும் உருவாக்கினார். அதேபோல், தமிழக அரசும் மூன்றாம் பாலினத்தவருக்கு பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அத்தகைய அரசின் நலத் திட்டங்கள் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு கிடைக்க வழிகாட்டி வருகிறார் மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த திருநங்கை மேகி (35). சுயதொழில் செய்யவும், வங்கிக் கடனுதவி பெறவும் மூன்றாம் பாலினத்தவர்களை தேடிச் சென்று சுயஉதவிக் குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து மேகி கூறியதாவது: மதுரைதான் எனது பூர்வீகம். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது உடலில் மாற்றம் ஏற்பட்டது. எனது வீட்டார் புறக்கணித்ததால் வீட்டை விட்டு வெளியேறி சுயமாக வாழ முடி வெடுத்தேன். சிறு வயதிலிருந்து கற்ற கும்மிப்பாட்டு கலைக்குழு மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கவுரவமாக வாழ்ந்து வருகிறேன். என்னைப்போல் மற்ற திருநங்கைகள், திருநம்பிகள் கவுரவமாக வாழவும், சுயதொழில் செய்யவும் வழிகாட்டுகிறேன். அடையாள அட்டை பெற்றுத் தருகிறேன்.
அதேபோல், பள்ளி, கல்லூரிகளில் திருநங்கைகள், திருநம்பிகள் கல்வி உதவித்தொகை பெற வழிகாட்டி வருகிறேன். இதன் மூலம், பல கல்லூரிகளில் 6 திரு நங்கைகள் அரசின் கல்வி உதவித் தொகையுடன் படித்து வருகின்றனர். இதில் சிலர் விரும்பியவாறு இஸ்திரி தொழில் செய்யவும், மாவு உற்பத்தி, பெட்டிக்கடைகள் வைத்து தந்துள்ளேன். இதற்கு திருநங்கைகள் ஆவண மைய நிறுவனர் பிரியாபாபு ஒத்துழைப்பில் திட்டங்கள் கிடைக்கச் செய்து வருகிறேன் என்று கூறினார்.