தொழில்நுட்பம் கையில் இருந்தால் வானமும் வசப்படும்: மீனவப் பெண்களுக்கு இணையவழி கல்வி
கடலூர்: ‘எளிய தொழில்கள் செய்யும் பெண்கள் இடையே, இணைய தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதன் மூலம், அவர்களது தொழில்சார் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். அதன்மூலம் அவர்களது பொருளாதாரம் மேம்படும்’ என்று பல்வேறு தரப்பில் களஆய்வு செய்த தொழில்சார் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த கருத்துருவை நடைமுறைப்படுத்தும் வகையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தனது மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் மீனவப் பெண்களுக்கான இணையவழி கல்வியை அளித்து வருகிறது.
இது தொடர்பாக இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும்,எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் தலைவருமான சி. வேல்விழியிடம் பேசினோம். அவர் கூறியது: கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் 42 கிராமங்களில் 1,234 பேருக்கும், புதுச்சேரி மாநிலப் பகுதியில் 10 கிராமங்களில் 287 பேருக்கும் இணையவழி கல்வி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சின்னவாய்க்கால், கலைஞர் நகர், எம்ஜிஆர் நகர், குமரப்பேட்டை, டிஎஸ் பேட்டை, சோனாங்குப்பம், சி.புதுப்பேட்டை, சி.புதுக்குப்பம், மடவாப்பள்ளம், சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள கோரி, கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள புதுநகர் ஆகிய 14 கிராமங்களைச் சேர்ந்த 421 பெண்களுக்கு இந்த இணையம் சார் கல்வி வழங்கப்பட்டுள்ளது .
இணைய தள வழியில் மீன் விற்பனை திறன்களை வளர்த்தல், தங்கள் தொழிலுக்கான சமூக ஆதரவுகளை வளர்ப்பது மற்றும் விற்பனையை மையமாகக் கொண்ட ஆக்கப்பூர்வமான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உருவாக்குவது போன்றவை இந்தப் பயிற்சி திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இந்தத் திட்டத்தின் தொடக்க கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 6 கடலோர மாவட்டங்களில் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், இராமநாதபுரம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி) 80 கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் மீனவப் பெண்களுக்கு இணையப் பயன்பாடு, கூகுள் பே, இணையத்தில் கணக்கு தொடங்குவது, இணையத்தை பயன்டுத்தி பணப்பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் பல்வேறு நாட்களில் அளிக்கப்பட்டன.
பகுதியில் மீனவ பெண்களுக்கு இணையவழி
கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இதில், தேர்தெடுக்கப்பட்ட மீனவ மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மீன் தர மேம்பாடு மற்றும் மேலாண்மை, மீன் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய இணைய வழிக் கல்வி, மீன் பதப்படுத்துதல் மற்றும் வணிக மேம்பாடு தொடர்பான செய்திகளை அவர்களுக்கு கொண்டு சேர்க்க ஒலி வடிவ குறுஞ்செய்திகளை அனுப்புதல், மீன்களை பதப்படுத்துதல் தொடர்பான ஆண்ட்ராய்டு செயலியை இயக்குதல், மீன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஆன்லைன் இணையதளத்தை அணுகுதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்றவர்களில் தமிழக அளவில் 50 மீனவ மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 10 டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு அவர்கள் பெற்ற பயிற்சியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
கிராமங்கள் சார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் நம் பெண்களிடம் மிகச்சிறந்த தொழில் நுணுக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மதிப்புக் கூட்டி எடுத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. இந்தச் சூழலில் வர்த்தகரீதியாக வெற்றியடைய அவர்களுக்கு மிக அடிப்படையான இணையம் சார்ந்த கல்வி தேவைப்படுகிறது. அதில் அவர்களுக்கு பெரும் தயக்கம் இருக்கிறது. இதுபோல பல தன்னார்வ அமைப்புகள் முன்வந்து, இம்மாதிரியான பயிற்சிகளை அவர்களுக்கு அளிப்பதன் மூலம், அவர்களின் தன்னம்பிக்கை தழைத்தோங்கும். அதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலை உயரும்.
