மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 4 டன் வாழைத்தார்: விவசாய தம்பதி தாராளம்
தஞ்சாவூர்: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 4 டன் வாழைத்தாரை திருவையாறைச் சேர்ந்த விவசாய தம்பதியர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வழங்கினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுகக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன்(50). விவசாயி. இவரது மனைவி கவிதா(45). இவர்கள், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தங்களது தோட்டத்தில் விளைந்த 4 டன் பூவன் வாழைத்தார்களை நேற்று வேனில் கொண்டு வந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
இவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், கோட்டாட்சியர் செ.இலக்கியா ஆகியோர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கெனவே கரோனா காலத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 4 முறையும், கடுவெளியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்திலும், தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் என பலமுறை மதியழகன் வாழைத்தார்களை இலவசமாக வழங்கியுள்ளார்.
