உ.பி.யில் 2 போலீஸார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி நபர் சட்டம் படித்து வாதாடி விடுதலை பெற்றார்

உ.பி.யில் 2 போலீஸார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி நபர் சட்டம் படித்து வாதாடி விடுதலை பெற்றார்
Updated on
1 min read

மீரட்: உத்தர பிரதேசத்தில் கடந்த 2011-ம் ஆண்டு சாம்லி நகரில் 2 போலீஸார் கொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகள் திருடி செல்லப்பட்டன. இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகள் சுமித் கைல், நீத்து மற்றும் தர்மேந்திரா. ஆனால், போலீஸார் சாம்லி நகரில் சுமார் 17 பேரை பிடித்து இந்த வழக்கில் கொலை குற்றச்சாட்டு சுமத்தினர்.

அவர்களில் அமித் சவுத்ரி என்பவரும் ஒருவர். இவருக்கும் போலீஸார் கொலைக்கும் தொடர்பு இல்லை. ஆனால் சம்பவம் நடந்த போது சாம்லி நகரில் இருந்ததால் இவரும் இந்த கொலை வழக்கில் சிக்க நேர்ந்தது. அப்போது அமித் சவுத்ரிக்கு வயது 18. ஏழை விவசாயியின் மகன் என்பதால் அமித் சவுத்ரியால் வழக்கில் இருந்து தப்ப முடியவில்லை. முசாபர் நகர் சிறையில் அமித் சவுத்ரி அடைக்கப்பட்டார்.

சிறையில் ஒழுக்கத்துடன் இருந்து கடந்த 2013-ல் ஜாமீனில் அமித் சவுத்ரி வெளியே வந்தார். கொலை வழக்கு ஆமை வேகத்தில் நடந்து வந்தது. எப்படியாவது சட்டம் படித்து, தான் குற்றம் மற்றவன் என்பதை நிரூபிக்க அமித் சவுத்ரி விரும்பினார். இதனால் பி.ஏ பட்டப்படிப்பு முடித்த பின் எல்எல்பி மற்றும் எல்எல்எம் சட்டப் படிப்புகளை முடித்தார். பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.

இவர் மீதான கொலை வழக்கு இறுதி கட்ட விசாரணைக்கு வந்த போது, இவரே வழக்கறிஞராக ஆஜரானார். சாட்சி கூண்டில் நின்றபோது, குற்றம் சாட்டிய போலீஸ் அதிகாரியால் அமித் சவுத்ரியை அடையாளம் காண முடியவில்லை. தன் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக, அமித் சவுத்ரி நீதிமன்றத்தில் வாதாடினார். இது நீதிபதியையே திகைக்க வைத்தது.

அதன்பின் அளிக்கப்பட்ட தீர்ப்பில் உண்மையான குற்றவாளிகள் சுமித் கைல், நீத்து மற்றும் தர்மேந்திரா என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சுமித் கைல் 2013-ம் ஆண்டு நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நீத்துக்கு ரூ.20,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தர்மேந்திரா என்பவர் தீர்ப்புக்கு முன்பே புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். அமித் சவுத்ரி உட்பட மற்றவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அமித் சவுத்ரி கூறுகையில், ‘‘துரதிருஷ்டவசமாக குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை காப்பாற்ற இனிமேல் நான் போராடுவேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in