

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்று வந்த புத்தகத் திருவிழாவை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ரூ.1.06 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விருதுநகரில் 2வது புத்தகத் திருவிழா கே.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளி பொருட்காட்சித் திடலில் கடந்த 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரக் கணக்கானோர் உள்பட சுமார் 1 லட்சம் பேர் இப்புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். 110 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகம் விற்பனை செய்யப்பட்டன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்பட்டன. பெரியவர்களை விட மாணவ, மாணவிகளே அதிகமான புத்தகங்களை வாங்கிச் சென்றதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, காமிக்ஸ், எழுத்துப் பயிற்சிப் புத்தகங்கள், சிறுகதை புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகி உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புத்தக விற்பனையில் ரூ.66 லட்சத்து 9 ஆயிரத்து 84 ரூபாய் மதிப்பில் புத்தக விற்பனை நடந்திருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கும், கிராமப் புற நூலகங்களில் வைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மட்டும் ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் ரூ.1 கோடியே 6 லட்சத்து 9 ஆயிரத்து 84 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.