

பொள்ளாச்சி: ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர் இனமக்கள் வேலைவாய்ப்பு, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால் வேலை தேடி குடும்பத்துடன் கேரளா மாநில வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சரகத்தில் பரம்பிக்குளம் செல்லும் வழியில், எருமைப்பாறை வன கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 40-க்கும் அதிகமான காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வந்தனர்.
தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் என தங்கள் வாழ்க்கை சூழலை அமைத்துக்கொண்டு காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த காடர்கள், வேலைவாய்ப்பு கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள கேரளா வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். தற்போது 27 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர் என பழங்குடியின செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது: ஆங்கிலேயர் காலத்தில் வளர்ப்பு யானை பராமரிப்பு, தேக்கு மரக்கன்று நடுதல், வனத்தில் தீ தடுப்பு உள்ளிட்ட வனத்துறை சார்ந்த பணிகளை காடர் இன பழங்குடியின ஆண்கள் மேற்கொண்டு வந்தனர். பெண்கள் சிறு வன மகசூல் மூலம் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டனர். எருமைப்பாறை பழங்குடியின கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் காடர் இன மக்களுக்கு இன்று வரை அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், காடுகளில் விலங்குகள் பருகும் ஊற்றுகளில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்புக்கு அருகிலேயே மின்கம்பிகள் சென்றாலும், அரைநூற்றாண்டுக்கு மேலாக இன்னும் மின்வசதி கிடைக்கவில்லை. மழையில் கரையும் மண்சுவரும், இரவில் ஒளிரும் மண்ணெண்ணெய் விளக்கும் மட்டுமே இன்று காடர்களுக்கு துணையாக உள்ளது. அடிப்படை வசதிகள் மட்டுமின்றி வேலைவாய்ப்பு கிடைக்காததால், பல குடும்பங்கள் தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறி கேரளாவின் பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். 40 குடும்பங்கள் இருந்த எருமைப்பாறை கிராமத்தில் தற்போது 27 குடும்பங்கள் மட்டுமே உள்ளன.
கேரளா வனப்பகுதியில், வேட்டைத்தடுப்பு காவலர் பணி, தீத்தடுப்பு காவலர் உள்ளிட்ட பணிகளில் ஆண்களுக்கும், அணைக்கட்டு பராமரிப்பு, காடுகளில் தீத்தடுப்பு கோடு அமைத்தல் ஆகிய பணிகளில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதால் கேரளாவின் குடியாறுகுற்றி, எர்த்டேம் காலனி, கடவு காலனி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். கேரளா அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பரம்பிக்குளம் வனப்பகுதியில் உள்ள குடியாறுகுற்றி, கடவு காலனி, 5-ம் காலனி, பூம்பாறை, எர்த் டேம் காலனி மற்றும் பிஏபி காலனி ஆகிய 6 வன கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு திட்ட அட்டை கூட வழங்கவில்லை. கேரளா மாநிலத்தின் பரம்பிக்குளம் வனப்பகுதியில் 18 கி.மீ தொலைவில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு புதைவட மின்கம்பி மூலம் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எருமைப்பாறை பழங்குடியின கிராமம் வழியாக மின்பாதை சென்றாலும் அந்த கிராமத்துக்கு மின்வசதி செய்து தரவில்லை. மின்மாற்றி அமைக்கப்பட்டதுடன் பணி நிறுத்தப்பட்டுள்ளது. எருமைப்பாறை பழங்குடியினர் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இடம்பெயர்ந்து செல்வதற்கு அடிப்படை வசதிகளும், வேலைவாய்ப்பும் இல்லாததே காரணமாகும். தமிழக அரசு பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இடம் பெயர்ந்து செல்வதை தடுக்கவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.