

உதகை: உணவு என்பது ஒருவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை வழங்குகிறது. அதனால் தான் அன்னதானத்தை நம் மரபில் ‘பிராண தானம்’ என்றும்அழைக்கிறோம். இதை விளக்கும் விதமாக 'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்ற மற்றொரு புறநானூற்று பாடல் வரியும் புழக்கத்தில் உள்ளது. அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும், யாருக்கும் அன்னதானம் செய்யலாம். ஒரு மனிதன் அடிப்படையான முதன்மையானது உணவு. உடை, இருப்பிடம் ஆகிய மற்ற இரு அம்சங்கள் இல்லாவிட்டால், வாழ்வின் தரம் தான் பாதிக்கப்படும். யாரொருவருக்கு உணவு இல்லையோ அவருக்கு வாழ்க்கையே பாதிக்கப்படும்.
அந்த காரணத்தினாலே பாரதியின் புகழ் பெற்ற பல வரிகளில், லட்சக்கணக்கானோர் நெஞ்சில் நிலைத்திருக்கும் வரியாக‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ எனும் வரி போற்றப்படுகிறது. எனவே கல்வி தானம், பொருள் தானம் உட்பட்டஏராளமான தானங்களின் வரிசையில் அன்னதானம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய அன்னதானத்தை உதகையை சேர்ந்த ஸ்ரீ அபுபாபாஜி அறக்கட்டளை, ஏழை, எளிய மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது.
‘அபுரோட்டி’ என்ற பெயரில் தினமும் மதியம் ஏழை, எளிய மக்களுக்கும், நாடோடிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கி வந்தது. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த சேவை, மூன்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது. தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதானம் சாப்பிட வருபவர்கள் எந்தவகையிலும் சங்கடப்படாதவாறு மேஜை, நாற்காலி போடப்பட்டு, தட்டு, தண்ணீர் குடிக்க டம்ளர் என சாப்பாட்டு அறை அறக்கட்டளை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பரிமாற வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என கூறுகிறார், அபுபாபாஜி அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் பிமல் ஜவேரி.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "சர்வ மத அறக்கட்டளையாக அபுபாபாஜி அறக்கட்டளை, உதகையில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவ தேவைகளுக்கும் உதவி வருகிறது. மத நல்லிணக்கத்துக்கும், சமூக சேவைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக கூறிக்கொள்வதைவிட, அதை விளம்பரப்படுத்தாமல் செயலில் காட்டுவதே உண்மையான சேவை. இதற்காகவே இந்த அறக்கட்டளையின் சார்பில், அனைத்து மதங்களின் விழாக்களையும் கொண்டாடுகிறோம்.
கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்து பிறப்பை விவரிக்கும் குடில் அமைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சேவைகளோடு, பசுமையான உதகையை உருவாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும், வசிப்பதற்கே தகுதியின்றி அடிப்படை வசதிகளே இல்லாத காந்தல்பகுதியிலுள்ள கஸ்தூரிபாய் காலனியிலுள்ள 400 குடிசைகளை, நிரந்தர வீடுகளாக மாற்றித்தரும் திட்டத்தின் கீழ் வீடுகளை புதுப்பித்து கொடுத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாள்தோறும் ஏழை, எளிய மக்களுக்கும், நாடோடிகளுக்கும் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கரோனா காலத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது, மீண்டும் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை, மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தம்பதி கலந்துகொண்டு, வசந்தி ஜவேரி முன்னிலையில் தொடங்கிவைத்தனர். உணவு உட்கொள்ள வருவோர் அமைதியாகவும், பதற்றமில்லாமலும் உணவு உண்ண டைனிங் ஹால் கட்டப்பட்டுள்ளது. மேலும், உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், உதகையின் காலநிலையை கொண்டு சூடாகவும் பரிமாற, அருகிலேயே சமையலறை இயங்கி வருகிறது. இதுதவிர மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்குஉதவி செய்யப்பட்டு வருகிறது. ஏழைமக்கள் பலருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.