Published : 19 Nov 2023 05:37 AM
Last Updated : 19 Nov 2023 05:37 AM

சுரங்க பாதையில் சிக்கியிருப்பதை அம்மாவிடம் சொல்லாதே: வாக்கி டாக்கியில் அண்ணனிடம் பேசிய தம்பி உருக்கம்

கோப்புப்படம்

டேராடூன்: ‘‘உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பதை அம்மாவிடம் சொல்லாதே’’ என்று வாக்கி டாக்கி வாயிலாக அண்ணனிடம் தம்பி உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுரங்கப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். ஏழாவது நாளாக நேற்றும் மீட்புப் பணி நீடித்தது.

சுரங்கப் பாதையில் புஷ்கர் (25) என்ற தொழிலாளி சிக்கியுள்ளார். அவரது அண்ணன் விக்ரம் சிங் சுரங்கப் பாதை வாயிலில் 7 நாட்களாக காத்திருக்கிறார். மீட்புப் பணி அதிகாரிகளின் ஏற்பாட்டின்பேரில் வாக்கி டாக்கி மூலம் புஷ்கருடன் அவரது அண்ணன் விக்ரம் சிங் நேற்று முன்தினம் பேசினார்.

அப்போது புஷ்கர் கூறும்போது, “சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருப்பதை அம்மாவிடம் சொல்லாதே, அவரால் தாங்கிக் கொள்ள முடியாது’’ என்று தெரிவித்தார்.

விக்ரம் சிங் கூறும்போது, “7 நாட்களாக சுரங்கப் பாதையின் வாயிலில் காத்திருக்கிறேன். எனதுதம்பியை விரைந்து மீட்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

3-வது மீட்பு திட்டம்: மீட்புப் பணி குறித்து மாநில பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் 6 துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்து, நார்வே, பின்லாந்தை சேர்ந்த சுரங்க மீட்பு நிபுணர்கள் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

சுரங்கப் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட உடன், ஜேசிபிஇயந்திரங்கள் மூலம் மணல் குவியலை அகற்றி தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேற்பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் 3 ராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம் மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இரும்பு குழாய் பாதையை ஏற்படுத்தி தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடினமான பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்திருப்பதால் துளையிடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

தற்போது 3-வது மீட்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து அடிப்பாகம் வரை சுமார் 103 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சுரங்கத்தின் மேற்பகுதிக்கு ராட்சத துளையிடும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.மேற்பகுதியில் உள்ள மரங்கள்வெட்டப்பட்டு பாதை அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்.

சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்சிஜன் ஆகியவை தொடர்ந்துகுழாய் வழியாக விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு மாநில பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x