

மதுரை: கேஸ் சிலிண்டரில் 'இஸ்திரி பெட்டி'யை இயக்குவது மதுரையில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், கரிப்பெட்டியில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது என்று சலவைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சித் தெரிவிக்கின்றனர்.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் இன்னமும் சலவைத் தொழிலாளர்கள் பாடு மட்டும் தீரவில்லை. கரியை கங்கு வரும்வரை தீ மூட்டி அதனை அள்ளி இஸ்திரி பெட்டிக்குள் போட்டு சூடேற்றி கங்கு அணையாமலும், அனல் குறையாமலும் பார்த்துக் கொண்டே துணிகளை அயன் செய்யும் பழைய தொழில்நுட்பத்தையே பின்பற்றி வருகிறார்கள். கடந்த காலத்தைபோல் தற்போது மக்கள் நொடிப்பொழுதில் அயன் செய்யக்கூடிய பாலிஸ்டர் துணிகளை அணிவதில்லை.
பலமுறை அடித்து துவைத்தாலும் அழுக்குப்போகாத காட்டன் துணிகளையும், ஜீன்ஸ் துணிகளையுமே அணிகின்றனர். அதனால், சலவைத் தொழிலாளர்கள் முன்பே போல் எளிதாக இந்த துணிகளை அயன் செய்துவிட முடியாது. ஒரு துணியை அயன் செயவதற்கே 10 நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும். அதற்கு பெரும் உடல் உழைப்பை அவர்கள் கொடுக்க வேண்டும். அவர்களுடைய சுமையை போக்கும் வகையில் தற்போது கரி இஸ்திரிப் பெட்டிகளுக்கு பதிலாக கேஸ் சிலிண்டரில் இயங்கும் இஸ்திரி பெட்டிகளை ஆயில் நிறுவனங்கள், தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த இஸ்திரி பெட்டி இருப்பதே சலவைத் தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாது நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கே இன்னமும் தெரியாது.
தற்போதுதான் இந்த கேஸ் சிலிண்டர் மூலமாக இயங்கும் இஸ்திரிப் பெட்டி பிரபலமடையத் தொடங்கியுள்ளது. மதுரையில் சில இடங்களில் சலவைத் தொழிலாளர்கள் இந்த இஸ்திரி பெட்டியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு துணிகளை அயன் செய்து கொடுக்கத்தொடங்கி உள்ளார்கள். தற்போது இந்த வகை இஸ்திரி பெட்டிகள், கடைகளில் மட்டுமில்லாது ஆன்லைன் சந்தைகளிலும் கிடைக்க ஆரம்பித்துள்ளதாக மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த சலவைத் தொழிலாளி ரங்கசாமி தெரிவிக்கிறார். இந்த இஸ்திரி பெட்டியை அவர், ஆன்லைனில் ரூ.7 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். இதன் மூலமாக சலவை தொழிலாளர்கள் இனி கரிப்பெட்டியில் இருந்து விடுபட்டு எளிதாக இந்தச் சலவை பெட்டியை பயன்படுத்தலாம்.
முன்பு கரி கங்கல் இஸ்திரி பெட்டியை கொண்டு அயன்செய்யும்போது, கார்பன்டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுவதால் அதனை சுவாசிக்கும் அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த உடல்நல குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். இதற்காக பிரத்தியேகமான கியாஸ் சிலிண்டர்கள் இல்லை. வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களை கொண்டே இந்த இஸ்திரி பெட்டிகளை பயன்படுத்தலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் இஸ்திரி பெட்டிகளுக்கு செலவாகும் மின்சாரக் கட்டணத்தை விட இரு மடங்கு குறைந்த செலவே, இந்த கியாஸ் சிலிண்டர் இஸ்திரி பெட்டிக்கு ஆவதாக சலவைத் தொழிலாளி ரங்கசாமி கூறுகிறார்.
தற்போது கருவேலம் மரங்களின் கரிகள் கிடைப்பதில் அதிகளவு சிரமம் உள்ளது. அதற்கு இந்த கேஸ் சிலிண்டர் இஸ்திரி பெட்டி பயனுள்ளதாக இருப்பதாகவும், கேஸ் ஆன் செய்த இரண்டு நிமிடங்களில் இந்த இஸ்திரி பெட்டி சூடாகி விடுகிறது. யார் வேண்டுமானாலும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்த இஸ்திரி பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளதால் அச்சப்பட தேவையில்லை. இந்த இஸ்திரி பெட்டிகள் கடந்த சில ஆண்டிற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போதுதான் பேட்டரி வாகனங்களை போல் பிரபலமடையத் தொடங்கியிருப்பதால், மதுரையில் பல இடங்களில் இந்த இஸ்திரி பெட்டிகளுடன் சலவைத் தொழிலாளர்களை பார்க்க முடிகிறது.