நடைபாதைகளில் வசிக்கும் ஏழைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் வீரர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

நடைபாதைகளில் வசிக்கும் ஏழைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் வீரர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு
Updated on
1 min read

அகமதாபாத்: நடைபாதைகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் பண உதவி செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் ரஹ்மானுல்லா குர்பாஸ். இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார் குர்பாஸ். இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவுடன் அகமதாபாத் நகரில் கடந்த 10-ம் தேதி விளையாடியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவுக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் தனியாக, அகமதாபாத் நகரின் சாலைகளில் நடந்து சென்று, நடைபாதைகளில் தூங்கும் ஏழை, எளிய மக்களுக்கு உதவியுள்ளார்.

சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு தெரியாமலேயே அவர்கள் படுக்கைக்கு அருகில் ரூ.500 நோட்டுகளை போட்டுவிட்டுச் செல்கிறார். இந்த வீடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

அதில் கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியுள்ளதாவது: இந்த மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரட்டுவதற்காக அயராமல் உழைத்துவரும் வேளையிலும் வெளிநாட்டில் ரஹ்மானுல்லா காட்டிய இந்த கருணை எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்நிலையில் ஏழை மக்களுக்கு உதவும் நல்லெண்ணம் படைத்த ரஹ்மானுல்லா குர்பாஸுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி ரசிகர்களின்இதயங்களை வென்றது. இந்நிலையில் ஏழை மக்களுக்கு உதவி அனைவரின் பாராட்டுகளையும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அள்ளியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in