உச்ச நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நடத்தும் உணவகம் திறப்பு!
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் ‘மிட்டி கஃபே' என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியவர்களால் நடத்தப்படும் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
உணவகத்தில் உள்ள மேலாளர்கள் பெரும்பாலானவர்கள் பார்வை குறைபாடு உடையவர்கள். பலர் மனவளர்ச்சி குன்றியவர்கள். சிலர் மாற்றுத் திறனாளிகளாகவும் உள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து என்ஜிஓ உதவியுடன் புதிய உணவகத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த உணவகத் தொடக்க விழாவில் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தேசிய கீதத்தைப் வாயால் பாடாமல் சைகை மொழியில் (பேச முடியாதவர்களுக்கான மொழி) மாற்றுத் திறனாளிகள் பாடினர்.
உணவகத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் திறந்துவைத்து பாராட்டினார். பின்னர் அவர் பேசும்போது, “மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சிக் குன்றியவர்கள் நடத்தும் இந்த உணவகத்துக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வரும் அனைவரும் வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும். அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்த `மிட்டி கஃபே' உணவகத்தை ஒரு அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானநிலையங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் 35 உணவகங்களை இந்த என்ஜிஓ திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
