

விழுப்புரம்: ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் கீத்தா ஷிமோட்சுகா (31). மாற்றுத்திறனாளியான இவருக்கு, இடது கையில் நான்கு விரல்கள் கிடையாது. அந்நாட்டில் முதுகலை பயின்றுள்ளார். ‘உலகைச் சுற்றி பார்க்க வேண்டும்’ என்பது கீத்தா ஷீமோட்சுகாவின் ஆசை. இதற்காக இவர், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஜப்பான் நாட்டில் இருந்து விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்தார்.
பின்னர், டெல்லியில் இருந்து தனது மிதிவண்டியில் சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். பல மாநிலங்களின் வழியே பயணித்து, அவர், விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். அங்கு, கீத்தா ஷிமோட்சுகா செய்தியாளர்களிடம், தன் சுற்றுப்பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். “மாற்று திறனாளியாக பிறந்து விட்டேன் என்பதற்காக ஒடுங்கி போகவில்லை. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கி இருக்கிறது. மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ‘ரோல்’ மாடலாக இருக்க விரும்புகிறேன்.அதைத் தாண்டி, உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசையாக உள்ளது.
எனது ஆசையின் முதற்கட்ட பயணமாக எங்கள் நாட்டில், கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் இருமுறை மிதிவண்டியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். ஜப்பானில் உள்ள 47 மாகாணங்களுக்கும் சென்றேன். அப்போது, எனது நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளின் வீடுகளில் தங்கி, அவர்களுக்குள் உற்சாகத்தை வரவழைத்தேன்.
என் அடுத்த கட்ட பயணமாக தற்போது உலக அளவிலான மிதிவண்டி வழி பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கியிருக்கிறேன். டெல்லியில் தொடங்கிய எனது மிதிவண்டி பயணம் கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை வழியாக வந்து, தற்போது ஆரோவில்லுக்கு வந்துள்ளேன். இந்தியப் பண்பாடும், இங்குள்ள மனிதர்களின் பழக்கவழக்கங்களும் எனக்கு பிடித்துள்ளது. என் மிதிவண்டி பயணத்தின் இடையே இந்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறேன். ஆரோவில் பகுதியில் இருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி வரை செல்கிறேன். எனது இந்த மிதிவண்டிப் பயணத்தை பிப்ரவரி மாதத்தில் முடிக்க இருக்கிறேன். தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு, பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இந்தப் பயணத்தின் மூலம் எனது வாழ்க்கையின் மையம் எது? எதை நோக்கி நான் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். பயணத்தை தொடங்குவதற்கு முன் இருந்த, ‘உலகை சுற்றிப் பார்க்க வேண்டும்’ என்ற விருப்பம் இன்னும் கூடியிருக்கிறது” என்று கீத்தா ஷிமோட்சுகா சொல்லும் போது, ‘இப்படி ஒரு பயணத்தை நாமும் தொடரலாமோ!’ என்று நமக்குள்ளும் ஒரு உற்சாகத்தை விதைத்து விட்டுச் செல்கிறார். கீத்தா ஷிமோட்சுகாவின் பயணம் சிறக்கட்டும்; ஆழ்ந்த அனுபவம் அவருக்கு கிட்டட்டும்