

மேட்டூர்: மேட்டூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சேகரமாகும் குப்பைகளை இரவு நேரங்களில் ஊழியர்கள் தீயிட்டு கொளுத்துவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் தினமும் 20-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதற்கு பயன்படுத்தப்படும் ஊசிகள், கையுறை, குளுக்கோஸ் பாட்டில், பஞ்சு உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை மருத்துவமனையின் தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து பிரேதப் பரிசோதனை கட்டிடம் அருகே குப்பையோடு கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் குப்பைகளை அகற்ற நகராட்சிப் பணியாளர்கள் மறுக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் குப்பை அள்ளுவதில் நகராட்சிக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.நகராட்சிப் பணியாளர்கள் குப்பையை அள்ளாமல் இருப்பதும், மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் நிரம்பி வழிந்து சிதறிக் கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது.
குப்பை கொட்டும் இடம் அருகில் ஆய்வகம், பிரேதப் பரிசோதனைக் கூடம் உள்ளது. ஆய்வகத்துக்கு வருபவர்கள் காத்திருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவமனையிலும் துர்நாற்றம் வீசுவதால், குப்பைகளை இரவு நேரங்களில் ஊழியர்கள் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் உள் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு தீர்வு காணவும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘மருத்துவக் கழிவுகள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக கொட்டப்படுகின்றன. ஆனாலும், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எடுக்க வருவதில்லை’ என்றனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவர்கள் பயன்படுத்திய கையுறைகள், நோயாளிகளுக்கு பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றை குப்பையுடன் சேர்த்து கொட்டு கின்றனர். இதனால், தூய்மைப் பணியாளர்கள் அவதிப் படுகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எங்களது ஊழியர்கள் சென்று குப்பைகளை பிரித்து எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளன. மருத்துவமனை நிர்வாகம் முறையாக குப்பைகளை பிரித்துக் கொடுத்தால் எடுக்கத் தயாராக இருக்கிறோம், என்றனர்.