

விருதுநகர்: விருதுநகர் கல்லூரியில் மாணவர்களே நடத் திய அங்காடித் திருவிழா களை கட்டியது. தொழில் முனைவோர்களாக புது அவதாரம் எடுத்த மாணவ, மாணவிகள் 2 நாளில் ரூ.5 லட்சத்துக்கு வணிகம் செய்துள்ளனர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி யில் அங்காடித் திருவிழா 2 நாட்கள் நடை பெற்றது. இளங்கலை மற்றும் முதுகலை அனைத்துத் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்று இதை நடத்தினர். முற்றிலும் மாணவர்களே தயாரித்த பொருட்கள் மற்றும் மாணவர்களால் வாங்கி வரப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பேன்ஸி ரகப் பொருட்கள், புகைப்பட அரங்கம், ஆல்பம் மற்றும் பிரேம் அரங்கம், ஜவுளியகம், ஐஸ்கிரீம் பார்லர், இளநீர் சர்பத், இனிப்பகம், தேன் விற்பனை நிலையம், பானி பூரி, சிறுதானிய உணவுகள், பொம்மை அங்காடி, குளிர்பான அரங்கம், சிற்றுண்டி மையம், விளையாட்டு போட்டி அரங்கம், அரிசியில் பெயர் எழுதி தயாரிக்கப்படும் கீ செயின், ரெடிமேட் ஆடையகம் என 48 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கினர். கல்லூரியில் முற்றிலும் மாணவர்களால் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த அங்காடித் திருவிழா உண்மையிலேயே விழா போல நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்த குதிரையேற்றமும் இருந்தது. இக்கல்லூரியில் குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் 5 குதிரைகள் வாங்கப்பட்டு கடந்த ஓராண்டாக மாணவ, மாணவிகளுக்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்படுவதாக முனைவர் ஆய்வு மாணவர் ராபின்சன் டேவிட்ராஜ் (25) கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் விக்னேஸ்வரன், என்.சி.சி. கேப்டன் அழகுமணி குமரன் ஆகியோர் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். அவர்களோடு மாணவர்களும் இணைந்து குதிரைகளை பராமரிப்பதுடன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்து வருகிறோம். 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குதிரையேற்ற பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறினார்.
அதோடு அங்காடி திருவிழாவுக்கு வந்த மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், அவர் களது குழந்தைகள் குதிரையேற்ற சவாரி செய்தனர். இதற்காக நபருக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அங்காடி திருவிழாவுக்கு வந்திருந்த மாணவ, மாணவியர் கடைகளை வியந்து பார்த்ததோடு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். 2 நாட்கள் நடந்த விழாவில் ரூ.5 லட்சத்துக்கு வணிகம் நடந்ததாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், வணிக மேலாண்மை துறைத் தலைவருமான பாலாஜி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: கல்வியோடு மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவத்தை ஏற்படுத்தி, அவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில் முனைவோராக்கும் எண்ணத்தில்தான் இந்த அங்காடி திருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது தொழில் திறனை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்திருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் திறமை இருக்கும். அதை உணரவும், அதை வெளிப்படுத்தி தொழில் முனைவோராகும் அச்சத்தை போக்கவும் இந்த திருவிழா நடத்தப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.