

துபாய்: மகேஷ்குமார் நடராஜன் ஆம்பூரைச் சேர்ந்தவர். சவுதியில் 2019-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். இதனிடையே அலுவல் வேலையாக சில மாதங்களுக்கு முன்பு அவர் துபாய்க்குப் பயணப்பட்டார்.
‘எமிரேட்ஸ் ட்ரா’ என்ற பிராண்டின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘பாஸ்ட் 5’ வகை லாட்டரியில் வெல்பவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம் வழங்கப்படும். ஆர்வத்தின் அடிப்படையில் மகேஷ்குமாரும் லாட்டரி வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு மெகா பரிசு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒவ்வொரு மாதமும் அந்த லாட்டரி நிறுவனம் ரூ.5.5 லட்சம் வழங்கும். இது குறித்து மகேஷ் குமார் நடராஜன் கூறுகையில், “நான் ஒரு ஆர்வத்தில்தான் லாட்டரி வாங்கினேன். என் லாட்டரிக்கு பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் என் வாழ்வில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன். என் படிப்புக்கு பலர் உதவி செய்தனர். இந்நிலையில், எனக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
துபாய்க்கு வெளியே வசிக்கும் ஒருவர் இந்த லாட்டரியில் பரிசு வென்றிருப்பது இதுவே முதன்முறை.
கடந்த ஜூலை மாதம் துபாயில் வேலை பார்க்கும் உ.பி.யைச் சேர்ந்த முகம்மது ஆதில் கான் என்பவருக்கு இதே லாட்டரியில் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.