

மதுரை: திருநங்கைகளின் வீர வரலாற்றை சொல்லும் ‘அரிகண்டி’ எனும் குறும்படத்தை ஆவணப்படமாக்கியுள்ளார் மதுரையை சேர்ந்த திருநங்கையும், இயக்குநருமான பிரியாபாபு. வீரன் ஒருவன் தமக்குத்தாமே வாளால் கழுத்தை அறுத்து உயிர் தியாகம் செய்வதை ‘அரிகண்டம்’ என்பர்.
பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றி பெறவும், நலம் பெறவும், எந்த நிகழ்வும் தடங்கலின்றி நடக்கவும் வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தம்மை பலி கொடுத்து கொள்ளும் வழக்கம் இருந்ததை அரிகண்டம் சிற்பங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.
அதேபோல், அரண்மனைக் காவலராக, போர் வீரராக இருந்த திருநங்கை ஒருவர் மன்னர்களின் பெண் வாரிசுகளை பாதுகாக்க தனது தலையை அரிந்து கொண்டு காப்பாற்றியதை ‘அரிகண்டி’ என்ற குறும்படமாக்கி ஆவணப்படுத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த திருநங்கை இயக்குநர் பிரியாபாபு.
இது குறித்து திருநங்கை பிரியாபாபு கூறியதாவது: திருநங்கைகளை சமூகத்தில் கேலிப் பொருளாக பார்க்கும் நிலை உள்ளது. அதை மாற்றும் வகையில் ‘அரிகண்டி’ குறும்படம் அமைந்துள்ளது.
திருநங்கைகள், மன்னர்களின் போர்க்களத்தில் வீரர்களாகவும், படைத்தளபதிகளாகவும் இருந்த வரலாறுகள் உள்ளன. குறுநில மன்னர்களின் அரண்மனைக் காவலர்களாக, போர் வீரர்களாக, அவர்களது பெண்களின் காப்பாளர் களாக இருந்துள்ளனர்.
அத்தகைய வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்தி உள்ளோம். இதற்காக சுமார் 12 ஆண்டுகள் திருநங்கைகளின் ஆதி வரலாறு, தமிழ் இலக்கியங்கள் இதிகாசங்கள், புராணங்களில் உள்ள கருத்துகளை குழுவாக சேகரித்துள்ளோம். எழுத்தாளர் கனியன் செல்வராஜ் எழுதிய அரிகண்டி முப்பிடாதி எனும் நூலும் துணையாக இருந்தது.
மன்னர்கள் காலத்தில் ‘அரண்மனை சேவகர்களாக, ஜமீனுக்கு விசுவாசமாக திருநங்கைகள் இருந்துள்ளதை ஆவணப்படுத்தி யுள்ளோம். நான், எடிட்டர் டேவிட் சுரேஷ், வில்லன் ராம்போ குமார், டாக்டர் ஷோலு ஆகிய 4 பேர் ஓராண்டாக பயணித்து தயாரித் துள்ளோம்.
இதற்காக தமிழகத்திலுள்ள 12 ஜமீன்களுக்குச் சென்று தகவல் திரட்டினோம். இதனை மதுரை அருகே சாப்டூர் ஜமீன், திருநெல்வேலி ஜமீன் அரண்மனைகளில் படமாக்கினோம். மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள் எடுத்துள்ளோம். இதில், 82 நடிகர்களில் 11 திருநங்கைகள் நடித்துள்ளனர்.
இது திருநங்கைகளின் முதல் வரலாற்று ஆவணப் படம். இந்தியாவில் முதல் திருநங்கை இயக்குநராக இயக்கியுள்ளேன். இதற்காக தமிழக அரசின் நிதியுதவி, நண்பர்கள் மற்றும் எனது சொந்தப்பணம் என ரூ.12 லட்சம் செலவில் எடுத்துள்ளோம். சுமார் 45 நிமிட குறும்படத்தை யூடியுப்பில் இதுவரை 3500 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
அரண்மனைப் பெண்களை காக்க தன்னையே பலியிட்டு எதிரிகளுக்கு சாபமிட்ட ‘அரிகண்டி’ எனும் திருநங்கையின் வரலாற்றைப் பார்ப்பவர்களின் கண்ணோட்டம் சமூகப் பார்வையாக இருக்கும். இதன் மூலம் திருநங்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள் ளோம். அடுத்ததாக அரசியலில் திருநங்கைகளின் ஈடுபாடு குறித்து குறும்படம் எடுக்கத் தயாராகி வருகிறோம். என்றார்.