விழுப்புரம் 30 | பசுமையை மீட்க படை திரண்டோம்..!

விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரியில் மரக்கன்று நடும் கரிகாலன் பசுமை மீட்பு படையினர்.
விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரியில் மரக்கன்று நடும் கரிகாலன் பசுமை மீட்பு படையினர்.
Updated on
2 min read

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டம் பெற்ற வளர்ச்சி குறித்து வெளியிட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இம்மாவட்டத்தில் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவோர் பற்றி இன்று...

விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பலன் தரும் மரக்கன்றுகளை நடுவதில் கரிகாலன் பசுமை மீட்பு படையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்த அகிலன், கிருஷ்ணராஜ், ரமேஷ் ஆகியோரிடம் பேசியதிலிருந்து.. “சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷின் செயல்பாடு எங்களை மிகவும் ஈர்த்து, யோசிக்க வைத்தது. விழுப்புரம் நகரம் முழுவதும் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச்சியால் சாலையோரம் இருந்த மரங்கள் முழுக்க அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதி மரங்களில் வாழ்ந்த பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதை தாமதமாகவே நாங்கள் உணர்ந்தோம்.

அதன்பின் இந்த அமைப்பை உருவாக்கினோம். கல்லூரி மாணவர்கள் முதல் பணியில் உள்ளவர்கள் என விழுப்புரம் மாவட்டத்தின் சுற்றுச்சூழலில் அக்கறை உள்ள 50 பேருடன் இணைந்து 28.5.2018 அன்று, விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரியை தூர்வாரினோம். அப்போது அங்கிருந்த சீமை கருவேல மரங்களையும் அகற்றினோம். கூடவே ஏரியின் வாய்க்கால்களை தூர்வாரினோம். ஆக்கிரமிப்பில் இருந்து அந்த ஏரியை மீட்டோம். தற்போது முத்தாம்பாளையம் ஏரி நீர், விளை நிலங்களுக்குச் செல்கிறது.

நாங்கள் இந்த முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த ஏரியில் படகு குழாம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, கடந்த சில மாதங்களுக்கு முன் திட்ட மதிப்பீடு ஒன்றை சுற்றுலா துறைக்கு அளித்துள்ளது. இது எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது. இதேபோல கண்டபாக்கம் ஏரியையும் தூர்வாரியுள்ளோம்.

இப்பணியின் தொடர்ச்சியாக விழுப்புரம் நகரில் உள்ள வீதிகளில் மின் கம்பிகள் செல்லும் பகுதிக்கு எதிர்புறம் பலன்தரும் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். ‘அரசியல் வாதிகள் மரக்கன்றுகள் நடுவதை போல இவர்களும் நடுகிறார்கள்’ என்று ஏளனமாகப் பார்த்த விழுப்புரம் நகர வாசிகள், நாங்கள் நட்ட மரக்கன்றுகள் நாள்தோறும் பராமரிக்கப்படுவதை கண்டு, எங்களுக்கு ஆதரவு அளித் தனர்.

தற்போது மருத்துவ குணம் வாய்ந்த செடிகளை மின் பாதை உள்ள தடத்தில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்காக நாங்கள் யாரிடமும் கை நீட்டி நன்கொடை என்று கேட்டதில்லை. எங்கள் அமைப்பில், அகிலன் என்பவர் வணிகர் சங்க நிர்வாகியாக இருப்பதால் வணிகர் சங்கம் மூலம் பண உதவி பெற்றுள்ளோம். எங்களின் வருவாயில் சிறு பங்கை மரக்கன்றுகள் நடுவதற்கு செலவிடுகிறோம்” என்கின்றனர்.

மரம் கருணாநிதி: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் கருணாநிதி என்பவர் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும் மரக்கன்றை பரிசாக அளித்து வருகிறார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இவரை ‘மரம் கருணாநிதி’ என்றே அழைக்கின்றனர். “விழுப்புரம் மாவட்டம் பசுமையாக, உங்களால் முடிந்தால் ஒரு மரக்கன்றை உங்கள் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நடுங்கள்.


மாமன்னர் அசோகர் எத்தனையோ போர்களில் ஈடுபட்டு, எண்ணற்ற உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த கோர நிகழ்வுகளுக்காக, அந்த பாவங்களுக்காக யாரும் இன்று அவரை நினைவு கூர்வதில்லை. இறுதியாக அதற்கு பிராயசித்தமாக அவர் மரங்களை நட்டதையே பேசி வருகிறோம். நாம் செய்த தீவினையில் இருந்து அகல மரங்களை நடுவோம்” என்கிறார். இதுபோல இம்மாவட்டத்தின் வளர்ச்சி, நிறை குறைகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in