

கொல்கத்தா: பிரேசில் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ, இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு இரண்டு நாள் பயணமாக அவர் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது அந்த மாநிலத்தில் நடைபெறும் துர்கா பூஜை கொண்டாட்டம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்க உள்ளார். அதோடு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பார் என சொல்லப்படுகிறது.
43 வயதான ரொனால்டினோ, 1999 முதல் 2013 வரையில் பிரேசில் அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். 97 போட்டிகளில் விளையாடி 33 கோல்களை பதிவு செய்துள்ளார். Ballon d'Or விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக அறியப்படுகிறார்.
இந்தியாவில் கால்பந்து விளையாட்டை அதிகம் ரசிக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது மேற்கு வங்கம். இந்த சூழலில் அங்கு வருகை தந்துள்ள ரொனால்டினோவுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை பார்த்து நெகிழ்ந்து போன அவர், தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.